மீனுக்காக வீசிய வலையில் ஏராளமான கடல் பாம்புகள் சிக்கியதைப் பார்த்த மீனவர்கள் அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் உறைந்து போயுள்ளனர்.
இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தின், நாவலடியில் நேற்று (டிசம்பர் 3) மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. அண்மைக் காலமாக, இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாது, சிரமத்துக்கு இடையே தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு, மீன்களுக்குப் பதில் வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது. இதனால் நாட்டில் காலநிலை மாற்றங்கள் ஏற்படச் சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளதோ என மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் அதிக அளவிலான பாம்புகள் மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்ததால், தற்போது சுனாமி அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மட்டக்கிளப்பு பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.�,