ஓகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் இன்று (டிசம்பர் 16) மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கடந்த 30ஆம் தேதி கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. தெருக்களிலும், வீடுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடலில் மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களில் பலரது நிலை என்ன என்று தெரியாமல் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற மீனவ மக்கள், காணாமல்போன மீனவர்களை விரைவில் மீட்டுத் தர வேண்டும் என்பதை வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
கடந்த 10ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள ராஜக்காமங்கலம்துறை, புத்தன்துறை, பெரியக்கா பள்ளம் உள்ளிட்ட 6 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக் கோரி 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாகச் சென்னையைச் சேர்ந்த மீனவர்களும், போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்குக் காவல் துறை அனுமதி வழங்காத காரணத்தினால், மீனவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மீனவர்கள் இன்று சேப்பாக்கத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடித்துத் தர நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்துத் தரக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.�,