[மீனவர்களின் நிவாரணத் தொகை உயர்வு!

public

மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கான நிவாரணத் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் மீன்வளத் துறை தொடர்பான மானியக் கோரிக்கையில் எம்எல்ஏக்கள் விவாதித்தனர். அப்போது அமைச்சர் கூறுகையில், “நான் மீன்வளத் துறை அமைச்சராகப் பதவியேற்றபோது, தமிழகத்தில் 4 ஆயிரம் படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தன. தற்போது படகுகளின் எண்ணிக்கை 45 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடியில் கடலரிப்பைத் தடுக்க சுவர் அமைக்கவும், விழுப்புரம் பொம்மியார்பாளையத்தில் கடற்கரை பாதுகாப்புக்காக தடுப்புச் சுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்று, மீனவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார். ”சென்னை மீன்பிடி துறைமுகத்தில் படகு நிறுத்தும் இடத்தில் இடநெரிசலைக் குறைப்பதற்காக படகு அணையும் தளம் நீட்டித்து அமைக்கப்படும்.

மீனவர்களின் மீன்பிடி திறன் மற்றும் மீன் உற்பத்தியை அதிகரிக்க 50 சதவிகித மானியத்தில் எந்திரங்கள் வழங்கப்படும். மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்ய, கடல் மீன் குஞ்சு வளர்ப்பகம் அமைக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவ மகளிருக்கு கடற்பாசி வளர்ப்பு மற்றும் உபபொருட்கள் தயாரிப்பு அலகு அமைக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள மீன் குஞ்சு வளர்ப்பு நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். தனியார் மீன் பண்ணைகளை ஊக்குவிக்க மீன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.30 லட்சம் மானியம் வழங்கப்படும்.

சென்னை ராயபுரத்திலுள்ள மத்திய சமையலறைக் கூடத்தில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மீனவ மகளிர் குழுக்கள், தொழில்முனைவோருக்கு கடல் உணவு தயாரிப்பு சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். சென்னை, மதுரையில் நவீன மீன் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். தூத்துக்குடி, தேங்காய்ப்பட்டணம், குளச்சல், சின்னமுட்டம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் கூட்டுறவு கடைகள் அமைக்கப்படும்.

மீன்பிடிக்கும்போது இறப்பு நேரிட்டால் வழங்கப்படும் உதவித்தொகை ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாகவும் கை, கால் இழப்புக்காக வழங்கப்படும் உதவித்தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாகவும் லேசான காயங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.20 ஆயிரம் ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தைச் சுற்றி அமைந்துள்ள 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பயிற்சி வழங்கப்படும். சென்னை மாதவரத்தில் மறுசுழற்சி முறையில் கொடுவா மீன்வளர்ப்பு தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் ஒருங்கிணைந்த பல்லடுக்கு நீர்வாழ் உயிரின வளர்ப்பு என்ற புதிய தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும்.

பழவேற்காடு ஏரியில் செயற்கை பவளப்பாறைகள் மற்றும் மீன்களைத் திரட்டும் செயற்கை பாறைகள் நிறுவப்படும். படிக்க முடியாத மாணவர்களுக்கும், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் திருவள்ளூர், காஞ்சீபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் நவீன மீன்வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மிதவைக் கூண்டில் மீன் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு கூண்டில் ஒரு ஆண்டுக்கு 4 டன் மீன்களை உற்பத்தி செய்ய முடியும்” என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *