நெடுவாசலில் மீத்தேன் எடுக்கும் திட்டம் உறுதியாகச் செயல்படாது என்பதால், அதற்காக தனியாகத் தீர்மானம் நிறைவேற்ற அவசியம் இல்லை என்று இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
சட்டசபை கூட்டம் இன்று ஜூலை 11ஆம் தேதி காலை 10மணிக்குக் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அதன் பின்னர், கேள்விநேரம் முடிந்ததும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்: ஓ.என்.ஜி.சி. எரிவாயு கசிவு தொடர்பாக கதிராமங்கலத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் 30ஆம் தேதி பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் மீது ஜாமீனில் வரமுடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் இதுவரை 93 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாகக் கடந்த 3ஆம் தேதி வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தினார்கள். நேற்று ஜூலை 10ஆம் தேதி, கதிராமங்கலத்தில் 27 கட்சிகள் இணைந்து பேரணி நடத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் சுமூகமான சூழ்நிலையை அரசு விரைந்து ஏற்படுத்த முன்வர வேண்டும். மேலும், இதுகுறித்து அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற்று அங்கு அமைதியான சூழ்நிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது, சபாநாயகர் குறுக்கிட்டு, இதற்கு நேற்றே விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் பேசுகையில்: நெடுவாசலில் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது. அதற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
அதற்குப் பதில் தெரிவித்து அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், :- இந்த பிரச்னை தொடர்பாக ஏற்கனவே பிரதமரை, முதலமைச்சர் சந்தித்து தமிழக மக்களின் கருத்தை தெரிவித்துள்ளார். மேலும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு விரிவான கடிதமும் எழுதியுள்ளார். அதற்குப் பதில் தெரிவித்து, கடந்த மே மாதம் 16-ஆம் தேதி மத்திய அரசிடம் இருந்து வந்த கடிதத்தில் மாநில அரசின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறோம். நீங்கள் விரும்பாவிட்டால், அந்தத் திட்டம் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நெடுவாசல் திட்டம் செயல்படாது, அதற்குத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறினார்.
அதையடுத்து, மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், வரும் 2020ஆம் ஆண்டிற்குள் மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தவில்லை என்றால் உரிமம் ரத்தாகி வி்ட கூடிய அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த போக்குவரத்துதுறை அமைச்சர், மதுரை மட்டுமின்றி, சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களிலும் விமான நிலையங்கள் விரிவாக்கத்திற்கு விரைவில் நிலம் கையகப்படுத்தப்படும். மேலும், மதுரை விமான நிலையத்திற்கு சுமார் 617 ஏக்கர் நிலம் கையப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த நிலங்களுக்கான உரிய கருத்துரு பெற்று மாவட்ட ஆட்சியர் மூலம் சுமார் 116 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், நெல்லை மாவட்டம் கயத்தாறு பகுதியில் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் விமானநிலையம் அமைக்கப்படுமா என காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி கேட்டார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர், கயத்தாறு உள்ளிட்ட 3 இடங்களில் விமான நிலையங்கள் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.
அதன் பின்னர், சட்டசபையில் பால்வளத் துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றபோது, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்த சாத்தூர் எம்.எல்.ஏ. சுப்பிரமணியன், தொகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு அமைச்சர் ஒத்துழைப்பு தருவதில்லை என்று புகார் கூறி அமைச்சரின் பேச்சை புறக்கணித்தார். சாத்தூர் எம்.எல்.ஏ. சுப்பிரமணியன், தினகரன் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கால்நடைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது, காங்கேயம் காளைகளை காக்க ரூ.2.50 கோடி செலவில் ஈரோட்டில் மாட்டின ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்தார்.. மேலும், ஜல்லிக்கட்டு விளையாட்டில் பயன்படுத்தப்படும் புலிக்குளம் மாடுகளைக் கவனிக்கும் வகையில், சிவகங்கை மாவட்டத்தில் ரூ.2 கோடி செலவில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.விவசாயிகளுக்குத் தொடர்ந்து வருமானம் கிடைக்கும் வகையில் 100 சிறு பால்பண்ணைகள் அமைக்க 1.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓசூரில் 6.75 கோடியில் நாட்டுக் கோழி பெருக்க வளாகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.�,