மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது பாஜக!

Published On:

| By Balaji

தொடர்ந்து இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைக்கிறது.

17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடந்தன. பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று (மே 23) எண்ணப்பட்டது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய விநாடி முதல் பாஜகவே முன்னிலையில் இருந்தது. வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கு நடந்த இத்தேர்தலில் இன்று (மே 24) காலை 6.00 மணி நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சி தனித்து 288 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 15 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எனவே பாஜக மட்டுமே இத்தேர்தலில் 303 தொகுதிகளைக் கைப்பற்றும் சூழல் உள்ளது.

ஆட்சியமைக்க 272 தொகுதிகள் போதுமானது என்ற நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒட்டுமொத்தமாக இத்தேர்தலில் 350 தொகுதிகளில் வெற்றி பெறும் தறுவாயில் உள்ளது. அதேபோல காலை 6.00 மணி நிலவரப்படி காங்கிரஸ் 50 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஒட்டுமொத்தமாக 92 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்னிலையில் உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி தனித்து முதன்முறையாக 300 தொகுதிகளுக்கு மேல் வென்றிருப்பது அதன் வரலாற்றில் இதுவே முதன்முறை. அதனால் பாஜக தொண்டர்கள் நாடு முழுவதும் மிகுந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவின் வெற்றி உறுதியான பிறகு நேற்று இரவு டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் சென்றனர். ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களும் அங்கு கூடியிருந்தனர்.

அவர்களிடத்தில் பேசிய மோடி, “என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் இந்திய நாட்டின் மக்களுக்காக அர்ப்பணிப்பேன் என உறுதியளிக்கிறேன். மக்கள், மோடி மோடி என்று கோஷமிடுகிறார்கள். ஆனால், இது மோடியின் வெற்றி அல்ல. நேர்மையான மக்களுக்குக் கிடைத்த வெற்றி. மக்களின் நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி” என்று பேசினார். பராதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இலங்கை போன்ற உலக நாடுகள் பலவும் வாழ்த்து தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

**இந்தி பேசும் மாநிலங்களில் சுழன்றடித்த மோடி சுனாமி**

வரலாற்றில் முன்னெப்போதும் பெற்றிடாத அளவுக்கு பாரதிய ஜனதா கட்சி 300க்கும் அதிகமான தொகுதிகளைப் பெற்றதில் வட இந்தியாவில் உள்ள இந்தி பேசும் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மிக முக்கியக் காரணமாக உள்ளது. பாரதிய ஜனதா கட்சி இம்முறை பெற்றுள்ள தொகுதிகளில், சரிபாதிக்கும் அதிகமான தொகுதிகளை இந்தி பேசும் மக்கள் வாழும் மாநிலங்களில் பெற்றுள்ளது.

**இந்தி பேசும் மக்கள் வாழும் மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றி மற்றும் முன்னிலை விவரங்கள்:**

**சத்தீஸ்கர் (11)** – பாஜக கூட்டணி (9), காங்கிரஸ் கூட்டணி (2)

**ஹரியானா (26)** – பாஜக கூட்டணி (26), காங்கிரஸ் (0)

**ஜார்கண்ட் (14)** – பாஜக கூட்டணி (12), காங்கிரஸ் கூட்டணி (2)

**மத்தியப் பிரதேசம் (29)** – பாஜக கூட்டணி (27), காங்கிரஸ் கூட்டணி (2)

**ராஜஸ்தான் (25)** – பாஜக கூட்டணி (25), காங்கிரஸ் கூட்டணி (0)

**உத்தரப் பிரதேசம் (80)** – பாஜக கூட்டணி (64), காங்கிரஸ் கூட்டணி (1), பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி (15)

**உத்தராகண்ட் (5)** – பாஜக கூட்டணி (5), காங்கிரஸ் கூட்டணி (0)

இம்மாநிலங்களின் மொத்தம் 190 தொகுதிகள் உள்ளன. இவற்றில் பாஜக கூட்டணி 168 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 7 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி 15 தொகுதிகளையும் பெற்றுள்ளன.

**மூன்றாவது பெரிய கட்சி திமுக**

இந்தியா முழுமையும் பாஜக வெற்றிகளைக் குவித்திருந்தாலும், தமிழகத்தில் மட்டும் எதிர்முகமான காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியே வெற்றிகளைக் குவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேலூர் தவிர்த்து 38 தொகுதிகளில் காலை 6 மணி நிலவரப்படி 34 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் திமுக மட்டுமே 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. தேனியில் மட்டும் அதிமுக முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து நாட்டில் அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக திமுக உள்ளது.

திருணமூல் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் வெற்றியும், 3 தொகுதிகளில் முன்னிலையும் பெற்றுள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வெற்றியும், ஒரு தொகுதியில் முன்னிலையும் பெற்றுள்ளது. சிவசேனா 17 தொகுதிகளில் வெற்றியும், ஒரு தொகுதியில் முன்னிலையும் பெற்றுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 9 தொகுதிகளில் வெற்றியும், ஒரு தொகுதியில் முன்னிலையும் பெற்றுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share