நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறியிருந்தார். இந்தப் புகாரை மறுத்த அர்ஜுன், ஸ்ருதி ஹரிகரன் மீது 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அர்ஜுன் மீது கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஸ்ருதி ஹரிகரன் அளித்த புகாரின் பேரில் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவருமே காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
இந்நிலையில் இந்தப் பிரச்சினையை மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. ஆணையத்தின் முன் விசாரணைக்கு வரும்படி ஸ்ருதி ஹரிகரனுக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று (நவம்பர் 14) மகளிர் ஆணையத்தின் முன் ஆஜரான ஸ்ருதி ஹரிகரன், அர்ஜுனுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். பின் ஊடகவியலாளர்களை சந்தித்த ஸ்ருதி, “மகளிர் ஆணையத்திடம் என் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறியுள்ளேன். பாலியல் புகாருக்கு தேவையான வீடியோ, ஆடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். அதனால் அதனை வெளியிடவோ, அது பற்றி பேசவோ முடியாது. எனக்குத் தகுந்த நீதி கிடைக்கும்” என்றார். மகளிர் ஆணையம் விசாரணைக்கு வருமாறு அர்ஜுனுக்கும் சம்மன் அனுப்பி உள்ளது.
இதனிடையே நடிகை ஸ்ருதி மீது அர்ஜுன் தொடுத்துள்ள வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதற்கு இடைக்கால தடை கேட்டு நீதிமன்றத்தில் ஸ்ருதி மனுதாக்கல் செய்துள்ளார்.
மேலும், நடிகர் அர்ஜுன் ஸ்ருதி ஹரிகரன் மீது சைபர் கிரைம் போலீஸில் புகார் கூறியதை அடுத்து, 120(பி) குற்றவியல் சதித்திட்டம், 385 (காயம் ஏற்படும் என்ற அச்சுறுத்தும் நிலையில் வைத்திருத்தல்), 34 (பொதுவான உள்நோக்கம்), 109(தூண்டுதல்), 419(ஆள்மாறாட்டம்), 114(குற்றம் இழைக்கப்படும் போது தூண்டுபவர் அவ்விடத்தில் இருத்தல்), 420(ஏமாற்றுதல்), 66சி (திருட்டை அடையாளம் காணுதல்), 66டி (கணிப்பொறி வைத்து ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்துள்ளனர். இந்தப் புகாரை மறுத்துள்ள ஸ்ருதி ஹரிகரன், இது அபத்தமான புகார் என்று கூறியுள்ளார்.�,