,மீண்டும் இமயமலை!

public

ரஜினிகாந்த் தனது ஆன்மிகப் பயணத்தின் அடுத்தகட்டமாக இமயமலையில் தியான மண்டபம் கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

ரஜினி ஆன்மிகப் பயணமாக அடிக்கடி இமயமலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர். பாபாவின் தீவிர பக்தரான இவர், தனது படங்கள் முடிந்த பின்னர் ஓய்வெடுப்பதற்காகவும், மன அமைதிக்காகவும் பாபாவின் குகை அமைந்துள்ள இமயமலைப் பகுதிக்குச் செல்வார். அவர் செல்வதை அறிந்த ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் பாபா குகைக்குச் சென்று வழிபட்டு வருவதை, இப்போதெல்லாம் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

1985ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராகவேந்திரா திரைப்படத்தின் மூலம் தனது ஆன்மிக ஈடுபாட்டை முதன்முறையாக பொதுவெளியில் வெளிப்படுத்தினார் ரஜினி. அதைத் தொடர்ந்து பொதுநிகழ்ச்சிகளில் ஆன்மிகக் கருத்துகளைப் பேச ஆரம்பித்ததோடு இமயமலைப் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கினார். இந்த நிலையில், ரஜினிகாந்த் தனது நண்பர்களான பெங்களூருவைச் சேர்ந்த ஹரி, சென்னையைச் சேர்ந்த விஸ்வநாதன், டெல்லியைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் ஸ்ரீதர் ராவ் ஆகியோருடன் இணைந்து இமயமலையில் தியான மண்டபம் கட்டியுள்ளார்.

இதுகுறித்து ரஜினியின் நண்பரும் குருசரண் டிரஸ்ட் நிர்வாகியுமான வழக்கறிஞர் விஸ்வநாதன், **“பாபாவின் குகை அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் தோணகிரி மலைப்பகுதியில் ஓர் ஏக்கர் நிலப்பரப்பில் 3,000 சதுர அடியில், சுமார் ஒரு கோடி ரூபாய் பொருட்செலவில் தியான மண்டபத்துடன் கூடிய பக்தர்கள் தங்குவதற்கான இடம் கட்டப்பட்டுள்ளது”** என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “இந்த தியான மண்டபம் பரமஹம்ச யோகானந்தர் என்பவரால் நிறுவப்பட்ட யோகதாஸ் சஷ்டங்க சொசைட்டி ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு திறக்கப்படவுள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்குத் தங்கும் இடமும் சாப்பாடும் இலவசமாக வழங்கப்படும்” என்று கூறினார்.

இந்த மண்டபத்தின் திறப்பு விழா நவம்பர் மாதம் 10ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ரஜினியின் குடும்பத்தினர், நண்பர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரையில் ரஜினி பங்கேற்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

தியான மண்டபத் திறப்பு பற்றிய தகவல்கள் வெளியானதிலிருந்து ரஜினியின் ஆன்மிக ஈடுபாடு பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் அரசியல் பிரவேசம் குறித்த ஒரு தெளிவான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், கடந்த மே மாதம் ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டபோது மேடையின் பின்புறத்தில் ‘பாபா’ படத்தில் பயன்படுத்திய அபான முத்திரைக்கு நடுவே தாமரை வைக்கப்பட்டிருந்தது, அவருடைய அரசியல் சின்னம் இதுவாக இருக்குமா என்று அனைவரையும் யோசிக்க வைத்தது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, ‘நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆண்டவன் தீர்மானிக்கிறான்; என்னுடைய வாழ்க்கை ஆண்டவன் கையில் இருக்கிறது. நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்கும் ஆட்களை எல்லாம் அருகில் சேர்க்க மாட்டேன்’ என்று கூறினார்.

இப்படி அவ்வப்போது அரசியல் பிரவேசம் குறித்து ஒரு நிலையற்ற கருத்தை கூறிவரும் ரஜினி, ஆன்மிகத்தில் காட்டும் ஈடுபாட்டை அரசியலில் காட்டாதது அவருடைய ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி பாபாவை ஏற்றதுபோல், ரஜினியை கடவுளாக ஏற்ற அவரது ரசிகர்கள் ஆண்டவனின் அருள் எப்போது கிட்டும் என்று வழி மீது விழி வைத்துக் காத்திருக்கின்றனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0