மீண்டும் இந்தியா வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் இறுதியில் இவாங்கா ட்ரம்ப் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக தெலங்கானா மாநிலத் தலைவரான ஹைதரபாத்துக்கு வந்தார். அப்போது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அவருக்கு சிகப்புக் கம்பள வரவேற்போடு இந்திய பாரம்பரிய முறையிலான வரவேற்பும் அளித்து மிக உயர்ந்த விருந்தும் அளித்தார்.
இந்நிலையில் நாடு திரும்பிய இவாங்கா ட்ரம்ப் தனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தமைக்காக சந்திரசேகர ராவுக்கு நன்றி தெரிவித்து தனது கைப்படக் கடிதம் எழுதியுள்ளார். அவர் கடந்த 30 ஆம் தேதி எழுதிய கடிதம் இப்போதுதான் ஊடகங்களுக்குக் கிடைத்துள்ளது.
’’நான் ஹைதராபாத் வந்தபோடு எனக்கு மிக அன்போடும் அக்கறையோடும் உபசரிப்பு அளித்தீர்கள். அதுவும் பலக்னுமா அரண்மனையில் தாங்கள் எனக்கு அளித்த விருந்தும் பரிசுகளும் என் அடிமனதைத் தொட்டுவிட்டன. என்றைக்கும் நான் இதையெல்லாம் மறக்கமாட்டேன். தங்களுக்கும் தெலங்கானா மாநில மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக விரைவில் மீண்டும் இந்தியா வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார் இவாங்கா ட்ரம்ப்.�,