மன்மர்ஜியான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனுராக் கஷ்யப் இயக்கும் த்ரில்லர் படத்தில் நடிகை தப்ஸி நடிக்கவுள்ளார்.
அனுராக் கஷ்யப் இயக்கத்தில் தப்ஸி நடித்த மன்மர்ஜியான் படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், மீண்டும் இருவரும் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளனர். த்ரில்லர் கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகவிருக்கிறது. இதுகுறித்து நடிகை தப்ஸி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மன்மர்ஜியான் படத்தில் எனக்குக் கிடைத்த அனுபவத்தைத் தொடர்ந்து மீண்டும் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் நான் பணிபுரிவேன் என எனக்கு ஏற்கெனவே தெரியும். ஆனால் அது இவ்வளவு விரைவாக நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. மேலும் பல படங்களில் இணைந்து பணிபுரிவது குறித்து நானும் சுனிரும் அண்மைக்காலமாக ஆலோசித்து வந்தோம். இந்தப் படத்துக்காக நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை அஜுர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சுனிர் கெதெர்பால் தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. நடப்பு ஆண்டின் கடைசி மாதங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தப் படத்துக்கு லொக்கேஷன் தேடும் பணிகளில் அனுராக் கஷ்யப் பிஸியாக இருக்கிறார். இந்தப் படம் குறித்து அனுராக் பேசுகையில், “தப்ஸி என்னை பிஸியாகவே வைத்துள்ளார். பல சவால்களை எடுப்பதற்கு எனக்கு அழுத்தம் கொடுக்கும் திட்டத்தில் அவர் இருக்கிறார். புதிய சவாலை எனக்குக் கொடுத்தார். நான் அதை ஏற்றுக்கொண்டேன். இதுபோல இதற்கு முன்பு நான் எதையும் இயக்கியதில்லை. ஆகையால் இந்தப் படத்துக்காக நான் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.�,