மின் கம்பி-பறிபோன இரண்டு பள்ளிச் சிறுவர்கள் உயிர்

public

வளர்ச்சியடைந்த நாடுகளின் நகர வடிவமைப்புகளும், வீதிகளும் குழந்தைகளை மையப்படுத்தியே அமைக்கப்படுகின்றன. ஒரு குழந்தை பிறந்து விளையாடும்போதும், பள்ளிக்குச் செல்லும்போதும் அது காயமின்றி உத்திரவாதத்தோடு வீடு திரும்பும்படியே கட்டுமானங்கள் உள்ளது. ஆனால், நம் நாட்டில் குழந்தைகளை மனதில்கொண்டு நாம் சாலைகளையோ, தெருக்களையோ கட்டமைக்கவில்லை. நாம் வளர்ந்துவரும் நாடு என்பதால் அதை முக்கிய விஷயமாகக் கருத வேண்டியதில்லை. ஆனால், அரசு ஊழியர்களின் கவனக்குறைவும், சமூக அமைப்பின்மீது பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு இல்லாத நிலையுமே பல மரணங்களுக்குக் காரணமாகின்றன.

அப்படி பலியாகியிருப்பவர்கள்தான் இந்த இரு குழந்தைகளும். ஆரணியருகே பள்ளி சென்ற அண்ணனும் தம்பியும் அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள் தாயின் கண்ணெதிரே. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியையடுத்த களம்பூர் குமாரசாமி காலனியைச் சேர்ந்த வேலு-சங்கீதா தம்பதியினரின் மகன்கள் சந்தோஷ்குமார், நிவேத்குமார். அங்குள்ள பொன்னகர் அரசு தொடக்கப்பள்ளியில் பயின்று வருகிறார்கள்.

பிள்ளைகள் இருவரையும் பள்ளியில் கொண்டுபோய் விடுவது தாயின் அன்றாட வாடிக்கை. சகோதரர்கள் இருவரும் தாயுடன் இன்று காலை பள்ளிக்குச் சென்றனர். களம்பூர் அரசு மருத்துவமனையின் பின்புறவழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்த இருவரும் மின்சாரம்தாக்கி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த களம்பூர் காவல்நிலைய போலீசார், சிறுவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தாயின் கண்முன்பே நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் குழந்தைகள் விஷயத்தில் நாம் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் இந்த சம்பவம்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *