மாலேகான் குண்டு வெடிப்பு: 7 பேர் மீது உபா சட்டம்!

Published On:

| By Balaji

மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ராணுவத் துணை தளபதி பிரசாத் சீறிகாந்த் புரோகித் உட்பட ஏழு பேர் மீது பயங்கரவாத சதி, கொலைக் குற்றம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய சிறப்பு தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றம் நேற்று (அக்டோபர் 30) உத்தரவிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி ஒன்றின் வெளியே குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டன. இதில், ஆறு பேர் கொல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பாக, சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாகூர், ராணுவத் துணை தளபதி பிரசாத் சீறிகாந்த் புரோகித், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரதிர்கார், சுதாகர் திவேதி, சமீர் குல்கர்னி மற்றும் சுதாகர் சதுர்வேதி ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான புரோகித், தன் மீது குற்றப்பதிவு, பதிவு செய்வதற்கு தடை விதிக்க, விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரியும் சட்ட விரோதச் செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்குத் தடை விதிக்கக் கோரியும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நேற்று முன்தினம் (அக்டோபர் 29) விசாரித்த உயர் நீதிமன்றம் குற்றப்பதிவு செய்யத் தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது. மேலும் தேசிய புலனாய்வு அமைப்பு வருகின்ற நவம்பர் 21ஆம் தேதி புரோகித் மனுவுக்குப் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு நீதிபதி வினோத் படல்கர் அமர்வு நேற்று உத்தரவிட்டது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் பயங்கரவாத சதி, கொலைக் குற்றம் ஆகிய பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனை சட்டத்தின்படி குற்ற சதி, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த உத்தரவு குறித்து பிரக்யா கூறுகையில், முன்னதாக தேசிய புலனாய்வு அமைப்பு என்னைக் குற்றமற்றவர் என்று கூறியது. ஆனால், தற்போது எனக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்படுகின்றன. இவை அனைத்தும் காங்கிரசின் சதி. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபித்துக் காட்டுவேன்” என்று கூறினார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share