தோழர் தியாகு உரை
தொகுப்பு: பியர்சன் லினேக்கர்.ச.ரே.
பிப்ரவரி 3 அன்று ‘தன்னாட்சித் தமிழகம்’ அமைப்பின் சார்பாக நடைபெற்ற மாநாட்டில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சார்ந்த தோழர் தியாகு ஆற்றிய உரை:
தமிழ்த் தேசியத் தன்னாட்சியை வென்றெடுப்போம் என்ற முழக்கத்தோடு நடத்தப்படுகிற இந்த மாநாடு முக்கியமானது. நான் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பாக இந்த மாநாட்டை ஆதரிக்கிறேன். பெயரிலேயே இந்த முரண்பாட்டைத் தானாக விளங்கிக்கொள்ள முடியும். அதே நேரத்தில் தோழர் ஆழி செந்தில்நாதன் குறிப்பிட்டதுபோல இந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிற எல்லா விதமான முழக்கங்களும் நமக்குத் தேவைப்படுகின்றன. அதனால் இந்தக் கோரிக்கையை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகத்தான் நான் பார்க்கிறேன்; தோழமையோடுதான் நான் அணுகுகிறேன். இதில் பகை முரண்பாடு என்று ஒன்றும் இல்லை.
ஒரு செய்தியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இதுபோன்ற முழக்கங்கள் புதியவையல்ல. 1938 செப்டம்பர் 11ஆம் நாள் சென்னை கடற்கரையில் தந்தை பெரியாரும் மறைமலையடிகளும் சோமசுந்தர பாரதியும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்மொழிந்தார்கள். தமிழகத் தன்னாட்சிக்கான தமிழ்நாடு தமிழருக்கே என்கிற சுய நிர்ணய தன்னுரிமைக்கான முதல் முழக்கம் அதுதான். அதற்குப் பின்வந்த பலரும் இந்த முழக்கத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். இது தமிழ்நாடு விடுதலைக்கான முழக்கமாக திராவிட நாடு கோரிக்கைக்கான முழக்கமாகவும் இருந்தது.
இன்றுகூட ஈழத்தில் தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற முப்பெரும் முழக்கங்களை விடுதலை சார்ந்த அமைப்புகள் எழுப்புகின்றன. Home-land, Nationhood and Self determination. ஒரு சின்ன வேறுபாடு என்னவென்றால், ’தேசியத் தன்னாட்சி’ என்று சொல்லும்போது அது National Self determination. Autonomy என்று சொல்லும்போது Regional Autonomy. ஆனால், தேசியம் என்பதும் தன்னாட்சி என்பதும் ஒன்று சேருவதில்லை. இது நுட்பமான சமூக அறிவியல் சார்ந்தது. மேலும் இதை எப்படிச் சொல்லலாம் என்கிற விவாதமும் தேவைப்படுகிறது. மேற்கு ஜெர்மனியில் Regional Autonomy உண்டு. அது தேசிய சுய நிர்ணய உரிமை கிடையாது. சோவியத் யூனியனில் சுய நிர்ணய உரிமை எல்லா தேசிய இனங்களுக்கும் இருந்தது. ஆனால், தற்போதைய ரஷ்யக் கூட்டமைப்புக்குள் பிராந்திய சுயாட்சி மட்டுமே உள்ளது.
**அண்ணாவின் முழக்கம்**
இங்கு 1938இல் எழுப்பப்பட்ட இந்த முழக்கம் 1949இல் திமுக தோன்றியபோது தனித் திராவிட நாடு முழக்கமாக மாறி 1956இல் தந்தை பெரியார் தனித் தமிழ்நாடு என்ற தொடர் முழக்கத்தை மேற்கொண்டார். இவர்களைத் தவிர ம.பொ.சி இந்தியத் தேசியத்துக்கு உட்பட்ட சுயநிர்ணய உரிமையைக் கோரினார். ஈழத்தையும் உள்ளடக்கி தமிழ்ப் பேரரசு என்ற முழக்கத்தை சி.பா.ஆதித்தனார் எழுப்பினார். 1961இல் அண்ணா திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடும்போதுகூட, கிடைத்திருக்கிற பட்டறிவின் அடிப்படையிலோ கோட்பாட்டு ஏளனத்தின் அடிப்படையிலோ கைவிடவில்லை. தடைச்சட்டம் வந்த காரணத்தினாலேயே கைவிட்டார்கள். எனவே, அதற்கு நிகரான முழக்கமாகத்தான் மாநில சுயாட்சிக் கோரிக்கையை முன்வைத்தார். திராவிட நாடு கேட்பதற்கான காரணங்களெல்லாம் அப்படியே இருக்கின்றன. ஆனால், அந்தக் கோரிக்கையைக் கைவிடுகிறோம் என்றார் அறிஞர் அண்ணா.
அறிஞர் அண்ணா மிகச் சிறந்த சொற்பொழிவாளர். தன்னுடைய பேச்சினால் எழுத்தினால் நாடாளுமன்றத்தில் வைத்த கூர்மையான வாதங்களால், இந்தியப் பேரரசைத் தோலுரித்துக் காட்டினார். இந்தப் பொருளில் அவருக்கு நிகரானவர் வேறு எவருமில்லை. ஆனால், அந்தப் படிப்பினையிலிருந்து அவர் எடுத்த முடிவென்பது வேறு. அவர் எழுப்பிய முழக்கம் எந்த அளவுக்குப் போயிருக்கிறது? அவரைப் பின்பற்றுபவர்கள் இதை வைத்து என்ன செய்தார்கள் என்பது வேறு விவாதம்.
**வரலாறு மீள்கிறதா?**
ஹெகலுடைய மேற்கோளை மார்க்ஸ் எடுத்துக்காட்டினார்: ”History repeats itself, first time as a tragedy and second time as a farce” என்று தனது The Eighteenth Brumaire of Louis Napoleonஇல் கையாண்டிருப்பார். வரலாறு மீள்கிறது. முதன்முறை ஒரு சோகக் காரணமாக. இரண்டாவது முறை ஒரு கேலிக்கூத்தாக. வரலாறு அப்படியே மீளவில்லை. நமக்கு ஓர் எச்சரிக்கையைக் கொடுக்கிறது. இன்று மீண்டும் ஒருமுறை தன்னாட்சி என்கிற முழக்கத்தை முன்வைக்கிறோம். மீண்டும் ஒருமுறை தேசியத் தன்னாட்சி, தேசிய விடுதலை என்ற முழக்கத்தை எழுப்புகிறோம் என்றால் வரலாறு மீள்கிற முறை என்பது பழையவற்றிலிருந்து பல படிப்பினைகளைக் கற்று அதிலிருந்து மேலெழுந்து செல்வதாக இருக்க வேண்டுமே தவிர, அதே வட்டத்தில் சுழல்வதாக இருந்தால் அது கேலிக்கூத்தாக மாறிவிடும். இது எனக்கு நானே சொல்லிக்கொள்வது. இந்தக் கோரிக்கையை முன்னெடுப்பவர்கள் அனைவருக்காகவும் சொல்லிக்கொள்வது.
நம்முடைய இலக்குதான் என்ன? போய்ச் சேர வேண்டிய இடம் எது? அதற்காக நாம் வைத்திருக்கும் பயணப் பாதை என்ன? ஒரு லட்சியத்தைக் குறிப்பது பெரிதல்ல. அந்த லட்சியத்தை எந்தச் சொற்களால் வெளிப்படுத்துகிறோம் என்பது பெரிதல்ல. அந்த லட்சியத்தை நோக்கிப் பயணிக்கிற பாதை பெரியது. வருண தர்மத்தை ஒழிக்க வேண்டுமெனில் நம்மிடமுள்ள Road Map என்ன? தமிழ்த் தேசியத்தை அமைக்கப்போகிறோம் என்றால் அதற்கு நம்மிடமுள்ள Road Map என்ன? வெறும் கூட்டாட்சி, சுயாட்சி என்று எடுத்துக்கொண்டாலே அதை அடைவதற்கு நம்மிடமுள்ள வழி என்ன? அதன் வழியிலிருக்கும் தடைகள் என்னென்ன? இதைப் பற்றிய தெளிவில்லாமல் வெறும் லட்சியத்தைப் பற்றி மட்டும் நாம் பேசிக்கொண்டிருக்க முடியாது.
நமது குறி இலக்கைத் தீர்மானிப்பது நமது பகை இலக்கு. இங்கே நமக்கு யார் பகை இலக்கு? இந்திய ஆட்சியாளர்கள் என்றால் இந்திய அரசாங்கமா? ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சிக்கு வருபவர்களா? அந்த நேரத்தைய பிரதமரா? அந்த நேரத்தைய ஆளுங்கட்சியா? இல்லை. It’s the State of India. நமக்குப் பெருந்தடையாக இருப்பது, நமது உரிமையை மறுப்பது ஒரு பிரதமரும் அமைச்சரவையும் ஆளுங்கட்சியும் ஆளும் கூட்டணியும் அல்ல. ஓர் அரசும் ஓர் அரசமைப்பும்.
நாம் போராடும்போது நாம் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய செய்தி எதிர்க்கட்சியும் நாமும் ஒன்றல்ல. நாம் ஆளும் வர்க்கத்துக்கு எதிர்க்கட்சி. அவர்கள் ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சி. நமக்கு ஆளும் கட்சி மாறுவது முக்கியமல்ல. ஆளும் வர்க்கம் மாற வேண்டும். ஆள் மாற்றுவது நம் நோக்கமல்ல. ஆள்வதற்குரிய போராட்ட வலிமையைப் பெற வேண்டும்.
யானை மேல் உட்கார்ந்திருக்கிற எறும்பு நான்தான் யானையை ஓட்டிக்கொண்டு போகிறேன் என்று கற்பனை செய்யலாம். உண்மையில் எறும்பு யானையை வழிநடத்தவில்லை. யானை போகிற போக்கில்தான் அது போகிறது. நம்முடைய வலிமை என்பது என்ன? மார்க்ஸ் சொன்னார். ஒரு கருத்து வெகுமக்களை ஆட்கொள்ளும்போது ஒரு பொருண்மிய ஆற்றலாக மாற வேண்டும். நம்முடைய கருத்தான தன்னாட்சி, தேசிய விடுதலை, சுயாட்சி போன்ற கருத்துகளை அதனால் பயனடையப் போகும் மக்களை அந்தக் கருத்துகள் ஆட்கொண்டிருக்க வேண்டும். மக்களின் நடைமுறை வாழ்க்கையின் வாயிலாக அவை போய்ச்சேர வேண்டும்.
முல்லைப் பெரியார், ஸ்டெர்லைட் போன்ற பல விஷயங்கள் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கின்றன. மக்களெல்லாம் அதில் பங்கேற்றிருக்கிறார்கள். அந்தப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். மக்கள் இந்த ஒடுக்குமுறையிலிருந்து மீள்வதற்குப் புதிய பாதை நோக்கிப் பயணிப்பதற்குத் தன்னாட்சி தேவை. அப்படியானால் நாம் பயணிக்கிற இந்தப் பாதை ஆளும் வர்க்கத்துக்கு எதிரானது. அதை வெல்லும் வலிமை மக்களுக்குத்தான் இருக்கிறது. அவர்களை ஒட்டித்தான் நம் பாதை அமைந்திருக்க வேண்டும். பதவி அரசியலின் வாயிலாக அல்ல, ஆளும் கட்சி – எதிர்க்கட்சி அரசியலின் வாயிலாக அல்ல, போர்க்குணமிக்க மக்கள் போராட்ட அரசியலின் வாயிலாக. அதுதான் நம் விடுதலைக்கான தன்னாட்சித் தமிழகத்துக்கான பாதை.
**மக்கள் கற்றுக்கொடுப்பார்கள்**
இதைப் பேசுவதற்கான துணிவு நமக்கு எங்கிருந்து கிடைக்கிறது? அரபு வசந்தம் நமக்கு அந்தத் துணிச்சலைக் கொடுக்கிறது; பாலஸ்தீன மக்களின் இண்டிஃபாடா கிளர்ச்சி நமக்குக் கொடுக்கிறது. எங்கோயிருக்கும் துனிசியா, எகிப்திலிருக்கும் அரபு வசந்தத்தைப் பற்றிப் பேசி மெரினாவில் நம்முடைய இளைஞர்கள் இதோ பார் தமிழ் வசந்தம் என்று நமக்குக் கற்றுக்கொடுத்தார்கள். மக்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டாம். மக்கள் நமக்குக் கற்றுக்கொடுப்பார்கள்.
மூன்று நான்கு ஆண்டுகள் இந்த இந்திய குடியரசுக்குள், தமிழக அரசுக்குள் தனியொரு குடியரசாக இடிந்தகரை இருந்தது. வெற்றிபெற்றதோ இல்லையோ, ஆனால் அறவழியில் போராடி இந்திய அரசுக்குப் பாடம் கற்றுக்கொடுத்தது. வலிமைமிக்க இந்திய அரசின் கைகளை நாம் கட்டிப்போட முடிந்தது. இன்று தமிழகமெங்கும் ரெட் ஸ்பாட்களாகப் பல போராட்டங்கள் எழுச்சி பெற்றுள்ளன. கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டம், சென்னை – சேலம் எட்டுவழிச் சாலைக்கெதிரான போராட்டம், நிலப்பறிப்புக்கு எதிரான போராட்டம், இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கிற, சமூக நீதிக்கு எதிரான அரசுத் திட்டங்களுக்கெதிரான போராட்டம், ஊழல் எதிர்ப்புப் போராட்டம் எனப் பல போராட்டங்கள். இப்போராட்டங்களின் அடிப்படையில் தன்னாட்சிக்கான போராட்டத்தை முன்னெடுப்பதுதான் நமக்கு முன்னிருக்கும் சவால்.
வெகுமக்கள் போராட்டம், அறவழிப் போராட்டம், போர்க் குணமிக்க போராட்டம் வழியாகத் தன்னாட்சித் தமிழகத்தை வென்றெடுப்போம்.
[தன்னாட்சி முழக்கம் காலத்தின் எதிரொலியா?](https://www.minnambalam.com/k/2019/02/06/22)�,”