மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதை விவசாயிகளிடையே ஊக்குவிக்கும் வகையில், குறைந்த தண்ணீரில் அதிக வருவாய் தரக்கூடிய காய்கறிகள், மலர்கள், பழ வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சையில்,பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகு படியையே நம்பியிருக்கின்றனர். அவர்களிடையே மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் காய்கறிகள், மலர்கள், பழ வகைகள், மலைத்தோட்டப் பயிர்களைச் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு 40 முதல் 50 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும்.
ஒரு விவசாயி, அதிகபட்சமாக 4 ஹெக்டேருக்கு இந்த மானிய உதவிகளைப் பெறலாம். மேலும், மகசூலை அதிகரிப்பதற்காக விரிவாக்க அலுவலர்கள் மூலம் உயர் சாகுபடி தொழில்நுட்ப வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, வீரிய ஒட்டு ரக விதைகள் அல்லது குழித்தட்டு நாற்றுகள், ஒரு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் இடுபொருள்கள் வழங்கப்படும். இந்தச் சலுகைகளைப் பெற விரும்பும் விவசாயிகள், வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுக வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,