மாற்றுத் திறனாளியின் ஒரு நாள் சப்- இன்ஸ்பெக்டர் ஆசை!

Published On:

| By Balaji

மன வளர்ச்சி குன்றிய இளைஞரின் ஒரு நாள் சப்-இன்ஸ்பெக்டர் கனவை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நிறைவேற்றியுள்ளார்.

சென்னையைப் பூர்வீகமாக கொண்ட ராஜீவ் தாமஸ் என்பவர் வேலை நிமித்தமாக கத்தார் நாட்டில் குடும்பத்துடன் குடியேறி வசித்து வருகின்றார். ராஜீவ் தாமஸுக்கு ஸ்டீவின் மேத்யூ என்ற மனவளர்ச்சி குன்றிய ஒரு மகன் உண்டு. கடந்த ஆண்டு பிரதமர் மோடி கத்தார் நாட்டுக்கு சென்றிருந்தபோது, அங்கு இந்திய தூதரகம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில், ஸ்டீவின் மேத்யூவும் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்களிடம் அவர்களின் கனவு, விருப்பம் ஆகியவற்றைப் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது ஸ்டீவின் மேத்யூ பிரதமரிடம், ‘நான் ஒரு நாள் சப்-இன்ஸ்பெக்டராக இருக்க வேண்டும்’என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

உங்கள் ஆசை நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மோடியும் உறுதியளித்தார். இதற்கான உத்தரவு பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசுக்கு வந்தது. இதையடுத்து, அரசின் உள்துறை செயலர் மூலம் மாநகர காவல் ஆணையருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்டீவின் மேத்யூ தன்னுடைய குடும்பத்தினருடன் சில தினங்களுக்கு முன்பு கத்தார் நாட்டிலிருந்து சென்னைக்கு திரும்பினர். மாநகர காவல் ஆணையரைச் சந்தித்து மேத்யூ பெற்றோர்கள் தனது மகனின் ஆசையை நிறைவேற்றுமாறு மனு அளித்தனர். அதற்கு காவல் ஆணையரும் சம்மதம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி நேற்று (ஆகஸ்ட் 18) ஸ்டீவின் மேத்யூ அசோக் நகர் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, 2 நட்சத்திரங்களுடன் சப்–இன்ஸ்பெக்டருக்கான சீருடை வழங்கப்பட்டது. அவரை அசோக் நகர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சூரிலிங்கம், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் காவலர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் அவரை உதவி ஆய்வாளர் இருக்கையில் அமரவைத்து அனைவரும் புகைப்படம் எடுத்து கொண்டனர். இதையடுத்து, அவருக்குக் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், போலீஸ் ஜீப்பில் இன்ஸ்பெக்டருடன் சேர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டார். காவல் நிலையத்தில் ஒரு மணிநேரம் உதவி ஆய்வாளராக இருந்த ஸ்டீவின் மேத்யூக்கு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. தன்னுடைய மகனை ஒரு போலீஸ் அதிகாரி போல் அமர்ந்திருந்த காட்சியை கண்டு, அவரது பெற்றோர் சந்தோஷமடைந்தனர்.

தனது மகனின் ஆசையை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கும் , காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கும் மேத்யூ பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

ஒவ்வொருக்கும் ஒரு ஆசை இருக்கும். அது நிறைவேறும் தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படி ஒரு சந்தர்ப்பம்தான் மேத்யூக்கு கிடைத்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share