மாற்றுத்திறனாளிகள் போராட்டம்: போலீஸாருடன் வாக்குவாதம்!

Published On:

| By admin

வங்கிக்கடன் வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸாருடன் மாற்றுத்திறனாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்குத் திரண்டு வந்து மனு கொடுத்தனர். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு நிபந்தனையற்ற வங்கிக்கடன் பெற்றுத்தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கிடையே மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர்களை வழங்குவதற்காக ஆட்சியர் விசாகன் கலெக்டர் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தார்.
இதைப்பார்த்த போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை குறித்து ஆட்சியரிடம் தெரிவிப்பதற்காகச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்தனர். இதனால் போலீஸாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே தகவலறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் விரைந்து வந்து மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது மாற்றுத்திறனாளிகள் சார்பில் சிலர் மட்டும் சென்று ஆட்சியரிடம் கோரிக்கை குறித்து தெரிவிக்க ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தார். இதையடுத்து நான்கு மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரைச் சந்தித்து பேசினர். அப்போது வங்கிக்கடன் பெற விண்ணப்பித்தபோது 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்களை வங்கி அதிகாரிகள் நிராகரித்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து பேசிய ஆட்சியர் விசாகன் தகுதியான பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை மாற்றுத்திறனாளிகள் 1,200 பேருக்கு வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட மனுதாரர்கள் கடன் பெற தகுதியானவர்களா என்று விசாரணை நடத்தி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதில் சமாதானம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸாருடன் மாற்றுத்திறனாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel