டெஸ்ட் போட்டிகளில் சில முக்கிய மாற்றங்களை அமல்படுத்தக் கோரி சர்வதேச கிரிக்கெட் வாரியத்துக்கு லண்டனை மையமாக கொண்டு செயல்படும் எம்.சி.சி. உலக கிரிக்கெட் கமிட்டி பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
மைக் கேட்டிங் தலைமையிலான எம்.சி.சி. உலக கிரிக்கெட் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் கடந்த வாரம் நடைபெற்றது. இதன் முடிவில் சில பரிந்துரைகளை இந்த கமிட்டி முன்வைத்துள்ளது. இந்த பரிந்துரைகள் எம்.சி.சி அமைப்பின் வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பதிவேற்றப்பட்டுள்ளது.
**நேரக் கட்டுப்பாடு**
ஸ்கோர் போர்டில் எலக்ட்ரானிக் கடிகாரம் (டைமர் கிளாக்) பொருத்தப்பட வேண்டும். ஓவர் முடிந்ததும் 45 வினாடியிலிருந்து கவுண்ட்டவுன் ஆரம்பிக்கும். இந்த நேரம், பந்தை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனுக்கு 60 வினாடிகளாகவும், புதிய ஓவரை வீச வரும் வீச்சாளருக்கு 80 வினாடிகளாகவும் அதிகரிக்கப்படும். கவுண்ட்டவுன் ஜீரோவை எட்டும் போது பேட்டிங் அல்லது பந்து வீச்சுக்கு இரண்டு அணி தரப்பினரும் தயாராக இருக்க வேண்டும். கவுண்ட்டவுன் முடிந்ததும் ஆட்டத்தை தொடங்காவிட்டால் எச்சரிக்கை விடுக்கப்படும். தாமதப்படுத்தும் அணிக்கு தண்டனை அளிக்கும் விதமாக எதிர் அணிக்கு ஐந்து ரன்கள் வழங்கப்படும்.
**டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஃப்ரீ ஹிட்!**
ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நோ பால் வீசினால் ஃப்ரீ ஹிட் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நோ பால் வீசுவது குறைந்துள்ளது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஃப்ரீ ஹிட் வழங்கப்படும் போது, நோ பால் வீசப்படுவது குறையும்.
**ஒரே மாதிரியான பந்துகளைப் பயன்படுத்துதல்!**
தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் எஸ்.ஜி, கூக்கபுரா, டியூக்ஸ் ஆகிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்க இருப்பதால் எல்லா டெஸ்ட் போட்டிகளுக்கும் (பகல் – இரவு டெஸ்டை தவிர்த்து) ஒரே மாதிரியாகத் தரமான பந்துகளை பயன்படுத்த வேண்டும்.
எம்.சி.சி. அமைப்பின் இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது குறித்து ஐ.சி.சி. விரைவில் முடிவு எடுக்கவுள்ளது. ஐ.சி.சி. ஒப்புதல் அளித்ததும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன.�,