சட்ட விரோதத் தொலைபேசி இணைப்பு முறைகேடு தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கில் சாட்சிகள் விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி அவருடைய சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்குச் சென்னை பிஎஸ்என்எல் அதிவேக தொலைபேசியின் 700க்கும் மேற்பட்ட இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாகவும் இதனால் அரசுக்கு சுமார் ஒரு கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை 14ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கிலிருந்து விடுவிக்க உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஏற்கனவே மறுத்துவிட்டன.
இந்தநிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன் சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராகக் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து சாட்சிகள் விசாரணை தொடங்கவிருந்த நிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்தும், அதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 5 பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு சென்னை 14ஆவது சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.வசந்தி முன் இன்று (நவம்பர் 2) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றச்சாட்டுப் பதிவை ரத்து செய்ய கோரும் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், தீர்ப்பு வரும் வரை சாட்சி விசாரணை தொடங்க வேண்டாமென உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை சிபிஐ தரப்பு வழக்கறிஞரும் ஆமோதித்த நிலையில், சாட்சிகள் விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆர்.வசந்தி உத்தரவிட்டுள்ளார்.�,