மார்க்சிஸ்ட் – காங் கூட்டணி அரசியல் தற்கொலையா?-சு.பொ.அகத்தியலிங்கம்.

public

“இடதுசாரிகளின் தேர்தல் தோல்விக்கான எதிர்வினை அரசியல் தற்கொலை அல்ல. ஆராய்வதும், வேலைசெய்வதும் தான்.” என்று ‘இடதுதிருப்பம்எளிதல்ல’எனும் நூலில் விஜய் பிரசாத் குறிப்பிடுவார். விரைவில் மேற்குவங்கச் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸோடு கூட்டணி அமைப்பார்களா? இப்போதைய பரபரப்பான விவாதம் இதுதான். இம்முறை அவர்களின் வியூகம் எத்தகையதாக இருக்கும் என்பதை அலச முந்தைய தோல்வியைச் சற்று நினைவூட்ட வேண்டியுள்ளது .

2011ஆம் ஆண்டு மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இடதுசாரிகளுக்குப் பேரதிர்ச்சியாகவும் வலதுசாரிகளுக்குக் கொண்டாட்டமுமாய் அமைந்தது. 35 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் இடதுசாரிகள் ஆட்சி தொடர்ச்சியாக இருந்த வரலாற்றுச் சாதனை முடிவுக்கு வந்தது. ஐந்து முறை ஜோதிபாசு முதல்வராகவும் ஆறாவது முறை புத்ததேவ் முதல்வராகவும் இருந்தனர். கேரளாவிலும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி தோல்வி அடைந்தது. ஆயினும், அது வலியாக உணரப்படவில்லை. சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றிவாய்ப்பை இழந்தது என்பதாலும் – உள்கட்சி மோதலும் ஒரு காரணியானதாலும் – காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என மாறிமாறிப் பதவிக்கு வருவது கேரளாவில் வழக்கமானதாலும் அடியின் வலி பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால், மேற்கு வங்கம் தொடர்ந்து சிகப்புத் தொட்டிலாகக் கருதப்பட்ட இடத்தில் 35 வருடங்களுக்குப் பிறகு வீழ்ச்சி என்பது பெரும் செய்தியானது .

ஆனால் ,சிங்கூரிலும் , நந்திகிராமிலும் அதற்கு முன்பே உருவான கலவரச் சூழலும்; இடதுசாரி ஆட்சியை வீழ்த்த மம்தா தலைமையிலான திரிணாமுல் முதல் நல்சலைட் வரை எல்லோரும் புனிதக்கூட்டு அமைத்ததும்; உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகள் பெருமளவு பணத்தைக் கொட்டிப் பிரச்சாரப் புயலைக் கட்டவிழ்த்து விட்டதும் தோல்வியை முன்னறிவித்தன. இவ்வளவுக்கும் பிறகும் 41 சதம் வாக்குகளை இடதுசாரிகள் பெற்றிருந்தனர் என்பதை மறந்துவிடக் கூடாது .

இந்தியாவிலேயே நிலச்சீர்திதிருத்தம் மிகவும் வெற்றிகரமாக நடந்த மாநிலம் மேற்கு வங்கமே. சுமார் 28 லட்சம் பேர் நிலம் பெற்றனர் .இதில் சரிபாதியினர் தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையோர் என்பது குறிப்பிடத்தக்கது . பின்னர், ராஜீவ்காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்ட “பஞ்சாயத்ராஜ்” சட்டத்தின் முன்னோடியாகக் கருதப்படும் உள்ளாட்சி ஜனநாயகத்தை முன்னத்தி ஏராக, நாட்டிலேயே முதன் முறையாக, மேற்கு வங்கமே வலுவாக்கி வழிக் காட்டியது. இந்திய அரசமைப்புக்குள் ஒரு மாநில அரசுக்கு வரையறைகள் உண்டு; அதிலும் 80க்குப் பிறகு உருவான உலகமயச் சூழல் எல்லா மாநிலங்களையும் விட மேற்கு வங்கத்தைக் கடுமையாகப் பாதித்தது. காரணம், இந்தியா முழுவதும் கடுமையாக எதிர்க்கும் பொருளாதாரக் கொள்கைகளில் கொஞ்சமெனும் அங்கேயும் அமுலாக்க வேண்டிய முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டது இடத் முன்னணி அரசு.

“வேலையின்மை கடுமையாகிறது; பொருளாதாரம் விவசாயத்திலிருந்து தொழில்களுக்கு மாறிக் கொண்டிருப்பதால் நகர்மயமாகும் போக்கு அதிகரிக்கிறது; இது நம் விருப்பத்தேர்வல்ல” என அன்றைய முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியதை மறுத்துவிட இயலாது. முதலாளித்துவ வர்க்கம் இச் சூழலில் நாம் மேலேசொன்ன “புனிதக் கூட்டணியை” உருவாக்கி, இடது முன்னணியைத் தோற்கடிப்பதில் வெற்றி பெற்றது. முதலாளிகள் அமைப்பான எப்.ஐ.சி.சி.ஐ.யின் செகரட்டிரி ஜெனரலான அமித் மித்ரா என்பவர் மம்தா அமைச்சரவையில் நிதியமைச்சரானது தற்செயலானது அல்ல.

மம்தா ஆட்சியில் மேற்கு வங்கம் புதிய வளர்ச்சி எதையும் காணவில்லை என்பது மட்டுமல்ல; ஏற்கெனவே இம் மாநிலம் பெற்றிருந்த முன்னேற்றங்களும் பின்னுக்குப் போயின. சட்டம் ஒழுங்கு சவாலானது. குண்டர்கள் ஆட்டம் சகிக்க முடியாத அளவுக்குப் பெருகிப் போயுள்ளது. பெண்கள், ஒடுக்கப்பட்டோர் மீதான தாக்குதல் நடைபெறாத நாளே இல்லை. எந்தப் பிரச்சனையை மம்தா ஆட்சியைப் பிடிக்கும் ஆயுதம் ஆக்கினாரோ, அதே நந்திகிராமம் , சிங்கூர் பிரச்சனகள் தீர்க்கப்பட வில்லை; வாக்குறுதிகள் காற்றில் பறந்தன.

“மா, மதி, மனுஷ்” அதாவது “தாய் – நிலம் – மக்கள்” என்ற கவர்ச்சிக் கோஷம் உயிரிழந்து எதிர்மறையாய் நிற்கிறது. மதக் கலவரத்தின் வாடையே தெரியாமல் 35 ஆண்டுகள் இடதுசாரிகள் ஆட்சி செய்தனர். ஆனால் இப்போது அங்கு மதக் கலவரம் மெல்லத் தலைதூக்குகிறது; குறிப்பாக, சங் பரிவாரின் இந்து மதவெறிச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன; பாஜக தன் வாக்குவங்கியைச் சற்று உயர்த்தியிருக்கிறது. இதற்கு, மம்தாவின் செயல்பாடுகளே பெரிதும் காரணமாகும். அதிலும் மத அடிப்படைவாதிகளோடு ரகசிய உறவு கொண்டு தன் வாக்குவங்கியைக் காக்க முயற்சிப்பதன் மூலம் மதக் கலவரத்துக்கு வழிசெய்து சங் பரிவாருக்கு உதவுகிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக மே. வங்கத்தில் ஜனநாயகம் பெரும் தாக்குதலுக் குள்ளாகியுள்ளது. குறிப்பாக, இடதுசாரிகள் மீது கடுமையான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதுவரை 170க்கும் மேற்பட்ட இடதுசாரி ஊழியர்கள் திரிணாமுல் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; அதில் 160க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட்டுகள். லட்சத்துக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் ஊழியர்கள் வீடுகளிலிருந்து விரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்னர். நூற்றுக்கணக்கான கட்சி அலுவலகங்களை, திரிணாமுல் கட்சி அராஜகமாகக் கைப்பற்றியது. தொழிற்சங்கம், வாலிபர்சங்கம், மாணவர் சங்கம், மாதர் சங்கம், விவசாய சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளின் மீது கடும் தாக்குதல் நடத்தப்படுகிறது. மேற்கு வங்க எதிர்கட்சித் தலைவரும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவருமான காந்தி பிஸ்வாஸ் மீதே தாக்குதல் தொடுக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் 70களின் முற்பகுதியில் சித்தார்த்த சங்கர்ரேயின் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் ஊழியர்களைக் கொன்று அரைப்பாசிச ஆட்சி நடத்திய நிலையை நோக்கி மேற்கு வங்கம் சென்று கொண்டிருக்கிறது .

இச் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் இந்த வன்முறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து மக்களைத் திரட்டி அண்மையில் பல பேரணிகள் நடத்தியுள்ளனர். பிபிஎம்ஓ எனப்படுகிற 113 அமைப்புகளை ஒன்று திரட்டிய மேற்கு வங்க வர்க்க வெகுஜன அமைப்புகளின் செயல் மேடை மாநிலம் முழுவதிலும் எல்லாத் தொகுதிகளையும் உள்ளடக்கி பேரணிகள் நடத்தியுள்ளன. 77,000 பூத்துகளிலும் இந்த எழுச்சிப் பேரணிகள் நடந்துள்ளன. இதன் தொடர்ச்சியாகவே தேர்தல் வியூகமும் முன்னுக்கு வந்துள்ளது .

வன்முறையிலிருந்து மேற்கு வங்கத்தை மீட்க – ஜனநாகத்தை மீட்க – மதவெறியைத் தனிமைப்படுத்த ஒருவழி காணவேண்டியுள்ளது. அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைப்பது இன்றையதேவை என மேற்கு வங்க மாநிலக் குழு பெரும்பான்மையோர் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கட்சியின் அரசியல் தலைமைக்குழுவும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அழைப்பு காங்கிரஸையும் சேர்த்தா எனக் கேள்வி எழுகிறது. அதிகாரபூர்வமாகப் பேச்சுவார்த்தை துவங்கவில்லை எனினும் அதனை நோக்கியே செல்வதாகச் செய்திகள் வழி அறிய முடிகிறது. தேர்தல் நடக்க உள்ள அசாம், கேரளம், தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களில் காங்கிரஸை எதிர்த்துவிட்டு மேற்கு வங்கத்தில் கூட்டு எனில் அரசியல் உறுதி கேள்விக்குள்ளாகுமே என விமர்சனமும் எழுகிறது .

இடது முன்னணிஅரசில் அதிகாரியாய்ப் பணியாற்றிய ஒருவரிடம் நேற்று உரையாடிய போது அவர் சொன்னர்: “கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள சூழலில் அங்கு கட்சியையும் ஊழியர்களையும் காப்பாற்றவும்; உருவாகிவரும் மம்தா எதிர்ப்புணர்வுக்கு வடிவம் கொடுக்கவும், மதவெறி சக்திகளைப் பின்னுக்குத் தள்ளவும் இது தவிர்க்க முடியாதது. இதனால் உடனடியான சாதகம் கிடைக்கும்; எனினும் தொலைநோக்கில் இது பாதகமான விளைவுகளை உருவாக்கவும் செய்யலாம் அல்லது அப்படி இல்லாமலும் போகலாம். கூட்டு இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை; மம்தா கோஷத்துக்கு எதிரான வலுவான மாற்று கோஷம் எதுவென்பது இறுதியாக்கப் படவில்லை. தேர்தல் அறிக்கை வெளியிடப் படவில்லை. எல்லாம் தெளிவான பிறகே அரசியல் விமர்சனம் செய்ய இயலும்” என்றார்.

இன்னொரு மேற்கு வங்க நண்பர் சொன்னார், “இந்தியா ஒரு நாடல்ல; உப கண்டம். இங்கு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகமும் மாநிலத் தேர்தலுக்கான வியூகமும் ஒரே மாதிரியாய் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தந்த மாநிலச் சூழல்தானே முக்கியம்” என்றார். அவர் மேலும் கூறுகையில், காங்கிரஸிலும் திரிணாமலோடு கூட்டு, இடதுசாரிகளோடு கூட்டு என இரு குரல்கள் ஒலிக்கின்றன. அவர்களும் இன்னும் முடிவெடுக்கவில்லை. அங்கும் சாதக பாதகங்கள் அலசப்படுகின்றன..”என்றார்.

ஒரு அரசியல் விமர்சகர் சொன்னார்: “இடதுசாரி ஆட்சியில் நடந்த சில சம்பவங்களை ஊதிப் பெரிதாக்கி 24 மணிநேரமும் தலைப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள்; இப்போது அங்கு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை வெறியாட்டத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? முதலாளித்துவ வர்க்கம் இடதுசாரிகளை ஒழித்துக் கட்ட விரும்புகிறது. இச் சூழலில் நீக்குப்போக்காக அங்கு முடிவெடுப்பதை எப்படித் தவறென்று சொல்ல முடியும் ?

“காங்கிரஸோடு கூட்டணியா என்கிற கேள்வி வெறும் நடைமுறைத் தந்திரம் பற்றியது மட்டும்தானா?அல்ல. கட்சியின் கொள்கை அடித்தளம் பற்றியதும்கூட. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு முடிவுதான் அடுத்த மாநாடுவரை கட்சியை வழிநடத்தும் என்பதன்றோ வழக்கம். பாஜக , காங்கிரஸ் இரண்டையும் எதிர்ப்பது என்ற சிபிஎம்மின் கடந்த அகில இந்திய மாநாட்டு முடிவுக்கு எதிரானதாக இந்த அரசியல் வியூகம் அமையாதா என்ற கேள்வியும் முன்னுக்கு வருகிறது” என்கிறார் இன்னொருசாரார்.

”காத்திரமான சூழலில் காத்திரமான முடிவு என்பதுதான் மார்க்சிய அணுகுமுறை என்பது உண்மைதான், ஆனாலும்…” என ஐயம் கொள்வோரும் உள்ளனர். நிலைமை தெளிவாக இன்னும் சிலவாரங்கள் ஆகலாம்.

உலகமய யுகத்தில் இடது திருப்பம் அவ்வளவு எளிதல்லதான் …..�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *