}மாம்பழத்திலும் இரட்டை இலை இருக்கிறது: ராமதாஸ்

Published On:

| By Balaji

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்காக நேற்று (மார்ச் 29) மாலை முதல் இரவு வரை திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் உள்ளிட்ட இடங்களில் பரப்புரை செய்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். அப்போது அவர் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை பற்றி சொன்ன செய்திகளைக் கேட்டு அதிமுகவினரே ஆச்சரியம் அடைந்தனர்.

“அதிமுகவின் அடிமட்ட தொண்டராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் சொன்னால் வாக்கு தவறமாட்டார்கள். அதனால்தான் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.இது ஒரு இயற்கையான கூட்டணி என்று. திமுகவோடும் நாங்கள் கூட்டணி சேர்ந்திருக்கிறோம். ஆனால் அவர்கள் மாலை போட்டு கழுத்தை அறுப்பார்கள். இப்போது கூட அவர்களுடைய கூட்டணிக்கு வரவில்லை என்ற கோபத்தால்தான் ஸ்டாலின் என்னை வசைபாடுகிறார்.

பெண்கள் சக்தி மிக்கவர்கள். ஆக்கும் சக்தி படைக்கும் சக்தி காக்கும் சக்தி, அழிக்கும் சக்தி இந்த மூன்று சக்தியும் பெண்களுக்கு உண்டு. மொத்தமுள்ள வாக்காளர்கள் 5 கோடியே 95 லட்சம் பேர்களில் பெண் வாக்காளர்கள் அதிகம் இருக்கிறார்கள். பொதுவாகவே பெண்கள் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு பழக்கப்பட்டவர்கள். இப்போது இந்தத் தொகுதியில் இரட்டை இலையைத் தேடுவார்கள். இங்கே மாம்பழம் சின்னத்தில் நமது பிள்ளை ஒட்டன் சத்திரத்தைச் சேர்ந்த ஜோதிமுத்து போட்டியிடுகிறார். அதனால் இரட்டை இலை இல்லையே என்று வருத்தம் வேண்டாம். இரட்டை இலை இருக்கிறது. எங்கள் மாம்பழம் சின்னத்தின் இரு பக்கமும் இரட்டை இலை இருக்கிறது பாருங்கள். அதனால பெண்களுக்கு மாம்பழத்தை தேடுவதில் பிரச்னை இருக்காது” என்றபோது மேடையில் இருந்த நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் ஆச்சரியப்பட்டனர்.

தொடர்ந்து பேசிய ராமதாஸ், “இரட்டை இலையின் கதை உங்களுக்குத் தெரியுமா? 1972 இல் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த புதிதில் இதே தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது. அந்த இடைத் தேர்தலில் எம்ஜிஆர் மாயத்தேவரை வேட்பாளராக அறிவிக்கிறார். மாயத்தேவர் எந்த சின்னத்தில் நிற்பது என்பதை அறிந்துகொள்ள தேர்தல் அதிகாரியான கலெக்டரைப் போய் பார்த்தார். 14 சுயேச்சை சின்னங்களைக் காட்டினார் கலெக்டர். அப்போது சுயேச்சை சின்னங்களில் ஒன்றாக இருந்தது இரட்டை இலை. அப்போது மாயத்தேவர் இதைக் கொடுங்க என்று சொல்லி இரட்டை இலையை வாங்கினார். மாயத்தேவர் வாங்கிய சுயேச்சை சின்னம்தான் இரட்டை இலை. அதனால் இரட்டை இலையுடன் கூடிய மாம்பழத்துக்கு வாக்களிக்க வேண்டும்” என்று முடித்தார் ராமதாஸ்.

இரட்டை இலைக்கும்- மாம்பழத்துக்கும் இவ்வளவு கதை இருக்கிறதா என்று அதிமுகவினரே ராமதாஸின் பேச்சைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share