தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதன் முறையாக தனது மாமனார் ஊருக்கு நேற்று (நவம்பர் 15) சென்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தங்கள் ஊரின் மருமகனான முதல்வரை மக்கள் திரண்டு வரவேற்றிருக்கிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து கடைசி விமானத்தில் கோவை சென்ற முதல்வர், அங்கிருந்து காரில் புறப்பட்டு நள்ளிரவு 1 மணிக்கு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். சில மணி நேர உறக்கத்துக்குப் பின் காலை 7 மணிக்கெல்லாம் புறப்பட்டு சங்ககிரி அருகே இருக்கும் தேவூர் அம்மாபாளையத்துக்குச் சென்றார் முதல்வர். அதுதான் முதல்வர் பெண்ணெடுத்த ஊர். அதாவது முதல்வரின் மனைவியும் காளியண்ண கவுண்டரின் மகளுமான ராதா பிறந்த ஊர். இது எடப்பாடிக்கு அருகே இருக்கிறது.
அம்மா பாளையத்தில் செல்வ விநாயகர், ஞானதண்டபாணி, மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காகத்தான் சென்றார் எடப்பாடி பழனிசாமி. மாரியம்மன் கோயிலுக்கு எடப்பாடி மனைவியும் நேர்த்திக் கடன் செய்துகொண்டு வழிபட்டார். வாங்க மருமகனே என்று ஊரில் உள்ள பெரியவர்கள் எடப்பாடியை வரவேற்க, ஒவ்வொருத்தராய் அழைத்து, ‘நல்லா இருக்கீங்களா… ஊரு எப்படி இருக்கு, நம்மளப் பத்தி என்ன பேசிக்குறாங்க?’ என்றெல்லாம் விசாரித்து அறிந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தேவூரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களையும் சந்தித்துக் கொஞ்ச நேரம் உரையாடிவிட்டுப் புறப்பட்டிருக்கிறார் முதல்வர்.
அதன்பின் எடப்பாடி அருகே உள்ள தன் சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்குச் சென்ற முதல்வர் தன் வீட்டில் மதிய சாப்பாட்டை முடித்துக்கொண்டு, மாலை சேலம் நெடுஞ்சாலை நகருக்கு வந்தார். அங்கிருந்தபடியே சென்னை, நாகை, ராமநாதபுரம் மாவட்ட அமைச்சர்களைத் தொடர்புகொண்டு கஜா புயல் நிலவரம் பற்றிக் கேட்டறிந்தார் எடப்பாடி.
இந்த ஊர்களுக்குப் பயணப்பட்டபோது இடையிடையே காரை விட்டு இறங்கி மக்களைச் சந்தித்து பல்வேறு மனுக்களையும் பெற்றுக்கொண்டார் எடப்பாடி.�,