அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் சில வாரங்களாகவே நாள் தோறும் நிர்வாகிகளை நியமித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் கட்சியின் அமைப்புச் செயலாளராக பண்ணைவயல் பாஸ்கரை மீண்டும் நியமித்து நேற்று (அக்டோபர் 3) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் தினகரன்.
இந்த அறிவிப்பு டெல்டா மாவட்ட அமமுகவினரை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. இதுபற்றி பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி அமமுகவினரிடம் விசாரித்தோம்.
“சசிகலாவின் அண்ணன் மகனான டாக்டர் வெங்கடேஷின் மாமனார்தான் பண்ணை வயல் பாஸ்கர். இவரது அண்ணன் தம்பிகள் ஐந்து பேரும் ஒவ்வொரு கட்சியில் இருப்பார்கள். இவர் தனது மருமகன் டாக்டர் வெங்கடேஷ் மூலமாக அதிமுகவில் இருக்கும்போதே பல சர்ச்சைகளுக்கு ஆளானவர்.
அமமுக தொடங்கப்பட்டபோது இவருக்குப் பதவி கொடுத்தார் தினகரன். ஆனால் இங்குள்ள நிர்வாகிகள் இவரது ஆதிக்கத்தனமான செயல்பாடுகளால், அதிருப்தி அடைந்தார்கள் என்பதால் மெல்ல மெல்ல பண்ணைவயல் பாஸ்கரனை ஓரங்கட்டினார்.
இந்நிலையில் மீண்டும் இப்போது அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தி கேட்டவுடனேயே டெல்டா மாவட்டத்தில் இருக்கும் அமமுக நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவுக்கே செல்லத் தயாராகிவிட்டார்கள். குடும்ப ஆதிக்கத்துக்கு பெயர் போன பண்ணைவயல் பாஸ்கர் கைகாட்டும் ஆட்களுக்குத்தான் இனி டெல்டா அமமுகவில் பதவி கிடைக்கும். மாவட்டச் செயலாளர்கள் கூட கட்சிக்காக உழைக்கும் நிர்வாகிகளுக்கு பதவி கொடுக்க முடியாது.
குடும்பத்தினரின் நெருக்கடி காரணமாகத்தான் தினகரன் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது” என்கிறார்கள்.
�,