கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து அதிமுக இரு அணிகளாகப் பிரிந்த சசிகலா தலைமையிலும், ஓபிஎஸ் தலைமையிலும் செயல்பட்டு வந்தது. தற்போது எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ஒன்றுசேர்ந்து, சசிகலாவையும், தினகரனையும் கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, கட்சியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்தார்கள்.
இந்த சூழலில் சசிகலாவும், தினகரனும் இனியும் அமைதியாக இருக்க முடியாது, ஆட்சியைத்தான் விட்டுவிட்டோம், கட்சியை விடக்கூடாது என்று திட்டமிட்டுள்ளனர். இதனால்தான் தினகரன் கட்சியை பலப்படுத்தி வருகிறார். தொடர்ந்து புதிய நிர்வாகிகளையும் அறிவித்து வருகிறார். ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள கடும் முயற்சி செய்து வருவதால், கட்சியைக் காப்பாற்றத் தவறி வருகிறார்கள். பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்தவர்களும் அணிகளின் இணைப்புக்குப் பிறகு அதிருப்தியில் வெளியேறி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து கட்சியைப் பலப்படுத்த கடந்த சில நாட்களாக தினகரன், மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் 4 அமைச்சர்கள் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்பாளர்களை அதிரடியாக நீக்கிவிட்டு, மாவட்டந்தோறும் தனது ஆதரவாளர்களை புதிய பொறுப்பாளர்களாக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.
இந்த சூழ்நிலையில் தர்மபுரி மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கே.பி.அன்பழகன் வகித்துவந்த மாவட்டச் செயலாளர் பதவியை அவரிடமிருந்து பறித்துவிட்டு, அதே சமுதாயத்தை சேர்ந்த டி.கே.இராஜேந்திரனை புதிய மாவட்டச் செயலாளராக அறிவித்தார். மாவட்டத்திலுள்ள 9 ஒன்றிய செயலாளர்களில், 8 ஒன்றிய செயலாளர்கள் புதிய மாவட்ட செயலாளர் இராஜேந்திரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
இந்த இராஜேந்திரன் யார் தெரியுமா? கோவை வேளாண்மை கல்லூரி மாணவிகள் பயணித்த பேருந்தை எரித்ததில் காயத்திரி, ஹேமலதா, கோகிலவாணி என்கிற மூன்று மாணவிகள் இறந்த வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றவர்தான் இந்த ராஜேந்திரன். இது தினகரனுக்கு தெரியுமா என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது.�,