மாணவர்களின் உயிரில் தொடர்ந்து விளையாடும் அரசு!

Published On:

| By Balaji

வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்பை தவிர்க்கும் குழந்தைகள், மீண்டும் பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற நோக்கில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. நீதிக்கட்சி ஆட்சிக்காலத்திலேயே அப்போதைய சென்னை மாகாணத்தின் ஒரு சில பள்ளிகளில் இத்திட்டம் செயல்பட்டு வந்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த காமராஜர் இதனை மதிய உணவுத் திட்டமாக மாற்றினார். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இது சத்துணவு திட்டமாக மேம்படுத்தப்பட்டது.

பின்னர், முட்டை, தானியங்கள் போன்றவையும் இந்தச் சத்துணவு உடன் இணைந்து வழங்கப்படத் தொடங்கின. தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் மதிய உணவின் தரம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருசில பள்ளிகளில் தரமில்லாத உணவு வழங்கப்படுவதால் மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன.

சமீபத்தில் கூட பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள எறையூர் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு அழுகிப்போன முட்டை வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பான [தகவல்கள்]( https://minnambalam.com/k/2017/07/26/1501074558) வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோல் கடந்த ஜூன் மாதத்தில், ஈரோட்டின் சிவகிரியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கண்டெடுக்கப்பட்டது. இதைச் சாப்பிட்ட 55 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு மதிய உணவு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், மக்களவையில் கடந்த திங்களன்று (ஜூலை 24) ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகம் உட்பட 15 மாநிலங்கள் , கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை அறிவதற்கான பரிசோதனைக்கு எந்த மாதிரிகளையும் அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளது. அதாவது கடந்த 2 ஆண்டுகளாக எந்தச் சோதனையும் மேற்கொள்ளப்படாமல் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

மதிய உணவு சட்டத்தின்படி, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை அரசு உணவு ஆராய்ச்சி ஆய்வகம் அல்லது ஏதேனும் அங்கீகாரம் பெற்ற ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும். ஆனால், இந்த நடைமுறை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. இதன் விளைவாகத்தான் பல்வேறு இடங்களில் பல்லி விழுந்த, ஆரோக்கியமற்ற, கெட்டுப் போன உணவுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் சுமார் 48 லட்சம் மாணவ-மாணவியர் மதிய உணவைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்குக் கல்வியுடன் தரமான உணவையும் வழங்குவது அரசின் கடமையாகும். எனவே மாணவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment