கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் நொறுக்குத் தீனிகளுக்கு தடை விதித்துள்ளது பல்கலைக்கழக மானியக் குழு.
இதுகுறித்து நேற்று(ஆகஸ்ட் 22) அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது. அதில், நொறுக்குத் தீனி உணவுகளை மாணவர்கள் அதிகளவில் உண்பதால் அவர்களின் ஆரோக்கியம் கெடுகிறது. உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமில்லாமல், பல்வேறு நோய்களும் ஏற்படக் காரணமாக இருக்கிறது. நொறுக்குத் தீனியை தடை செய்வதன் மூலம் மாணவர்கள் சிறப்பாக வாழ முடியும், நல்ல முறைல் படிக்க முடியும். வாழ்க்கை முறை நோய்களைத் தடுக்க உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதில் ஆசிரியர்கள் கண்டிப்புடன் செயல்பட வேண்டும். இதற்கு முன்பு, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கிய அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் நொறுக்குத் தீனிக்கு தடை விதிக்கப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொழுப்பு,உப்பு, சர்க்கரை மிகுந்த உணவு பொருட்கள் பற்றி வெளியிட்ட அறிக்கையை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ இந்த முடிவை எடுத்தது. மேலும், மாணவர்களிடம் ஆரோக்கியமான உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனித வள அமைச்சரகத்தின் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக மானியக் குழு இந்தச் சுற்றறிக்கையை அனுப்பியது. அதனால், இந்த உத்தரவை அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.�,