^மாணவரை தாக்கிய ஆசிரியரின் பின்னணி!

Published On:

| By Balaji

கடலூர் மஞ்சக்குப்பத்திலுள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் -2 படித்தவர் மாணவர் தினேஷ். அதே வளாகத்தில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார். சக மாணவர்களுடன் நேற்று பள்ளிக்குச் சென்ற தினேஷ், அரசின் இலவச மடிக்கணினியை வழங்குமாறு கேட்டிருக்கிறார். அந்த சமயம், அங்கு வந்த உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன், மாணவர் தினேஷை சரமாரியாகத் தாக்கினார். இந்த வீடியோ பெரிய அளவில் பகிரப்பட்டது. ஆசிரியர் மீது புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த தினேஷ், கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரையடுத்து, ஆசிரியர் சந்திரமோகன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆசிரியரை உடனடியாக விடுவிக்கக் கோரி, அவருடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள் நேற்று பள்ளியிலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளி மாணவர்கள்தான் வேன்றுமென்றே வந்து பிரச்சினை செய்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்.

அவர்களிடம் பேசிய இன்ஸ்பெக்டர், “ஆசிரியருக்கு ஆதரவாக நீங்கள் போராட்டம் நடத்தினால், மாணவருக்கு ஆதரவாக சக மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டம் நடத்துவர். எனவே போராட்டத்தைக் கைவிடுங்கள்” என்று சுமூகமாகப் பேசி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

இதுதொடர்பாக பேசிய தினேஷின் நண்பர் ராஜ்குமார், “எங்களை பார்த்தா ரவுடி போல் தெரியுதா சார். நாங்கள் அதே பள்ளியில் படித்த மாணவர்கள். இப்பவும் அதே பள்ளி வளாகத்தில் உள்ள கல்லூரியில்தான் படிக்கிறோம். அரசு கொடுக்க வேண்டிய லேப்-டாப் எங்களுக்கு வர வேண்டியுள்ளது. அதைத்தான் நாங்கள் அனைவரும் சென்று கேட்டோம். பள்ளி முதல்வர் கூட அமைதியாக, அலுவலகத்தில் சென்று கேளுங்கள் என்று சொன்னார். ஆனால், பி.டி மாஸ்டர்தான் ரவுடித்தனமாக நடந்துகொண்டார். அந்த ஆசிரியரால் ஒவ்வொரு வருடமும் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். தினமும் மாணவர்களை அடிப்பார்” என்றார் கோபமாக.

இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடம் கேட்டபோது, “கடந்த ஆகஸ்ட் மாதமே ஆசிரியர் சந்திரமோகன் மீது, மாணவரைத் தாக்கியதாக எங்களுக்கு புகார் வந்தது. அப்போதே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர். ஆனால், மனமிறங்கி வந்த மாணவர், ஆசிரியருடன் சமரசம் செய்துகொண்டு புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டார். இனி மாணவர்களை அடிக்கக் கூடாது என அவருக்கு அறிவுறுத்தி அனுப்பினேன். திருந்துவார் என நினைத்தேன். ஆனால், அவர் திருந்தாமல் மீண்டும் இதுபோன்று மாணவரை அடித்ததால் வழக்குப் பதிந்து கைது செய்துவிட்டோம்” என்றார்.

மாவட்ட கல்வி அதிகாரி ஆறுமுகத்திடம் இதுபற்றி பேசியபோது, “இதுதொடர்பாக எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. பள்ளியிலும் அறிக்கை கேட்டிருக்கிறோம். காவல் துறையிலிருந்து முதல் தகவல் அறிக்கையும் எங்களுக்கு வரும். அதன் பிறகு ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்போம்” என்று உறுதியளித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share