&
‘தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்’ என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
பிரபல கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா மீது இந்தியாவில் பாரத் ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று அவற்றை திருப்பி செலுத்தாதது. மேலும் ஐடிஐபி வங்கியில் சுமார் 720 கோடி ரூபாய் கடன்பெற்று மோசடி செய்தது என பல்வேறு அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் மல்லையா மீது பிணையில் வெளிவராதபடி பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி இந்தியாவிலிருந்து லண்டன் தப்பிச் சென்றார்.
இந்தச் சூழ்நிலையில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி லண்டனில் விஜய் மல்லையாவை ஸ்காட்லான்ட் யார்ட் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று மணி நேரத்திலேயே 5.39 கோடி ரூபாய்க்கான சொந்த ஜாமீனில் விடுதலை செய்யபட்டார். மேலும் வரும் மே 17ஆம் தேதி லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மல்லையாவின் குற்றங்கள் இந்தியாவில் நடைபெற்றுள்ளதால் அவரை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசும், புலனாய்வுத்துறையும் ஈடுபட்டுள்ளன. பிரிட்டன் சட்ட விதிகளுக்குட்பட்டு அவை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.�,