பினாங்கு துணை முதல்வர் ராமசாமியின் மகன் திருமண வரவேற்பில் கலந்துகொள்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்றிரவு மலேசியா புறப்பட்டுச் சென்றார்.
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மலேசியா பினாங்கு துணை முதல்வர் ராமசாமியும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் நெருங்கிய நண்பர்கள். ராமசாமி இல்லத்தில் நிகழ்ச்சி நடந்தால் வைகோ மலேசியா சென்று கண்டிப்பாக நிகழ்வில் கலந்துகொள்வார். அதேபோல வைகோ இல்ல நிகழ்வுகளில் ராமசாமியும் கலந்துகொள்வார்.
இந்நிலையில் ராமசாமியின் மகன் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்றிரவு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனது உதவியாளர்களுடன் சென்னை விமான நிலையத்திலிருந்து மலேசியா புறப்பட்டுச் சென்றார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய வைகோவுக்கு, டத்தோ ராஜிவ், பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மலேசிய இளைஞர் நலம், விளையாட்டுத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் கியோங், இன்று (ஜூலை 11) வைகோவைச் சந்தித்துப் பேசினார். அப்போது கடந்த முறை கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைகோ திருப்பி அனுப்பப்பட்டதற்குத் தனது வருத்தத்தை அமைச்சர் தெரிவித்துக்கொண்டார். கடந்த முறை சென்றபோது மலேசியாவில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடக் குடிக்கவில்லை என்று அவரிடம் வைகோ சொல்ல, உடனே ஒரு கிளாசில் தண்ணீரை ஊற்றி வந்து கொடுத்த அமைச்சர், தவறை நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் இந்தத் தண்ணீரை நீங்கள் குடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த உரையாடலை வைகோவின் செயலாளர் அருணகிரி தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து மலேசியா பத்துமலை முருகன் கோயிலுக்கும் வைகோ சென்றார். மேலும் பல்வேறு தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பினாங்கு துணை முதல்வர் ராமசாமி மகள் திருமணத்தில் பங்கேற்க வைகோ மலேசியா சென்றிருந்த நிலையில், அவருக்கு விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் திருமண நிகழ்வில் கலந்துகொள்ளாமலேயே தமிழகம் திரும்பினார். இதற்குப் பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
�,”