�தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு நடந்த தேர்தல் தொடர்பான ஆட்சேபங்கள் குறித்து பரிசீலித்து முடிவெடுக்கத் தமிழக சுகாதாரத் துறை செயலருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் வியாழக்கிழமை (பிப்ரவரி 22) நடைபெற்றது. இந்தத் தேர்தலின்போது விதிகள் பின்பற்றப்படாததால், புதிதாக தேர்தல் நடத்தக் கோரியும், புதிய நிர்வாகிகள் பதவியேற்க தடை விதிக்கக் கோரியும் டாக்டர் பாலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கனகராஜ் தகுதி இல்லாதவர்களும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டதாகவும், 83 ஆயிரத்து 253 வாக்காளர்களில் 58 ஆயிரம் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்ததால், இந்தத் தேர்தலே செல்லாதது எனவும் வாதிட்டார்.
இதையடுத்து, தேர்தல் தொடர்பாக மனுதாரர் அளித்த ஆட்சேபத்தைப் பரிசீலித்து முடிவெடுக்க சுகாதாரத் துறை செயலருக்கு உத்தரவிட்ட நீதிபதி, தேர்தல் தொடர்பான ஆவணங்களைப் பத்திரப்படுத்தமாறு மருத்துவ கவுன்சில் நிர்வாகிக்கு அறிவுறுத்தினார்.
�,