மருத்துவப் படிப்பு நிபந்தனைகள்: தலைமை வழக்கறிஞர் தகவல்!

Published On:

| By Balaji

மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்கான நிபந்தனைகளை மாற்றியமைப்பது தொடர்பாகத் தமிழக அரசுடன் ஆலோசனை செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளார் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்.

மருத்துவ முதுகலை மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர விதிக்கப்பட்ட நிபந்தனைகளை எதிர்த்து, வழக்கறிஞர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறைச் செயலாளரின் அறிவுறுத்தலின்படி, முதுகலை மருத்துவம், மருத்துவப் பட்டயப் படிப்புக்கான விளக்கக் குறிப்பேட்டில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தனது மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

“மருத்துவப் பட்டயப் படிப்பில் சேருபவர்கள் ரூ.20 லட்சம் டெபாசிட் செய்யவேண்டும். விண்ணப்பதாரருக்குஇணையான அல்லது உயர் பதவியில் உள்ள 2 அரசு ஊழியர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அரசு விதித்த நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ளது. அதேபோல, மருத்துவ முதுநிலைப் படிப்பில் சேரும் விண்ணப்பதாரர்கள், 2 அரசு ஊழியர்கள் உத்தரவாதத்துடன் ரூ.40 லட்சம் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனை ஏழைகள், சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.இவர்களால் பெரும் தொகையைச் செலுத்தவோ, இரு அரசு அதிகாரிகளிடம் இருந்து உத்தரவாதம் பெறவோ முடியாது.

சில அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்கப் பெரும் தொகையை லஞ்சமாகக் கேட்கலாம். எனவே, இந்த நிபந்தனைகள் நியாயமற்றவை, சட்டவிரோதமானவை, ஒருதலைபட்சமானவை என்று அறிவித்து, அவற்றை ரத்து செய்யவேண்டும்” என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த முறை இவ்வழக்கு விசாரணை நடைபெற்றபோது, மருத்துவ மேற்படிப்புகளில் சேரத் தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களின் முழு விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர் உயர் நீதிமன்ற நீதிபதிகள். “தகுதி அடிப்படையில் தேர்வாகி, புதிதாக விதிக்கப்பட்ட நிபந்தனைகளால் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியாமல் இருப்பவர்களின் விவரங்கள், மருத்துவ மேற்படிப்புகளில் தற்போதுள்ள காலியிடங்கள் குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

நேற்று (ஜூன் 10) இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் இதில் ஆஜரானார். அப்போது, மருத்துவ மேற்படிப்பில் சேர அரசுப் பணியாளர்களிடம் உத்தரவாதப் பத்திரம் பெறும் நடைமுறை கேரளம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வருவதாகத் தெரிவித்தார். இந்த நிபந்தனைகளை மாற்றியமைப்பது தொடர்பாக தமிழக அரசுடன் கலந்தாலோசிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

**

மேலும் படிக்க

**

**

[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)

**

**

[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)

**

**

[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)

**

**

[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)

**

**

[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share