மருத்துவப் படிப்பு அரசாணை ரத்து: எதிர்த்து மேல்முறையீடு!

public

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழகப் பாடத்திட்ட மாணவர்களுக்கு ஆதரவாகத் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். முதல் 25 இடங்களைக்கூட பிடிக்காத நிலையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவிகிதமும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 சதவிகித இடமும் ஒதுக்கப்படும் என்ற அரசாணையைக் கடந்த ஜூன் 22ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தொடர்ந்த வழக்கு கடந்த ஜூலை 14ஆம் தேதி தனி நீதிபதி ரவிச்சந்திரபாபு அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவப் படிப்பில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவிகித இட ஒதுக்கீடு அளித்த, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிய தர வரிசை பட்டியல் தயார் செய்து, அதனடிப்படையில் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சல் விதிகளுக்கு எதிராக மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டார். இதனால் மருத்துவக் கலந்தாய்வு எப்போது நடக்கும் என்பதே கேள்வி குறியாகியுள்ளது.

இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழகச் சுகாதாரத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் முன்னிலையில் நேற்று ஜூலை 17ஆம் தேதி மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு என்பது கொள்கை முடிவில் எடுக்கப்பட்டதால் அரசாணை வெளியிடப்பட்டது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் சி.பி.எஸ்.இ. மாணவர்களும் ஒரு கேவியட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்போது தங்களது கருத்தையும் கேட்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0