ஈரோடு அருகே பள்ளி மாணவர்கள் சாலையோரம் நட்ட மரக்கன்றுகளின் தடுப்பைப் பிடுங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்கள் வளர்த்துவந்த மரக்கன்றுகளின் தடுப்பைப் பிடுங்கி வீசி எறியும் உதவி ஆய்வாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சாணார்பாளையம் கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள் தங்களது பள்ளியில் வழங்கிய மரக்கன்றுகளை அப்பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோயில் அருகே சாலையோரமாக நட்டுவைத்து ஆடு, மாடு அந்த மரக்கன்றுகளை மேய்ந்துவிடாமல் பாதுகாக்க தடுப்புகளை அமைத்து வளர்த்துவந்தனர்.
சாலை அருகே உள்ள வீட்டுமனைகளுக்கு பாதை அமைக்கும் பணியை மேற்கொள்ள இந்த மரக்கன்றுகள் இடையூறாக இருப்பதால், அதை அகற்றுமாறு அந்த வீட்டுமனைகளில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர் ஜெயசந்திரன் கூறியுள்ளார். அதற்கு அப்பகுதி மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கட்டிடப் பொறியாளர் ஜெயசந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக வெள்ளோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வெள்ளோடு காவல்நிலையத்தின் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் லோகநாதன், புகாரின் மீது எந்த விசாரணையும் நடத்தாமல் பள்ளிக் குழந்தைகள் வளர்த்துவரும் மரக்கன்றுகளின் தடுப்புகளை பிடுங்கி எறிந்தார். இதை ஆடு மாடுகளிடமிருந்து பாதுகாத்து எப்படி வளர்க்கிறீர்கள் என்று பார்க்கலாம் என உதவி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இதை ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, உதவி ஆய்வாளர் லோகநாதன் ஈரோடு மாவட்ட ஆயுதப்படை பிரிவுக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.�,