பசு காப்பகம் தொடர்பான வழக்கு விசாரணையில் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்த ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மயில் ஏன் இந்தியாவின் தேசிய பறவை தெரியுமா என்று புது விளக்கம் அளித்துள்ளார்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய பசு காப்பகமான ஹிங்கோனியா கோசாலா ராஜாஸ்தானில் உள்ளது. இங்கு கடந்த 2016ஆம் ஆண்டு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் உடல் நலக் குறைவால் உயிரிழந்தன. இது தொடர்பான வழக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நேற்று மே 31ஆம் தேதி விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். அதோடு, பசுவதை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து 139 பக்க வழிகாட்டுதல்களை அளித்துள்ளார்.
இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை செய்துள்ள மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதியின் இந்த உத்தரவு சர்ச்சையை எழுப்பியுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு, நீதிபதி மகேஷ் சந்திர சர்மா நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்து நாடான நேபாலில் பசு தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல இந்தியாவிலும் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். இந்தியாவின் தேசிய பறவையாக மயில் ஏன் அறிவிக்கப்பட்டது என்றால், மயில் வாழ்நாள் முழுவதும் கற்புநெறியுடன் பிரம்மச்சாரியாக இருப்பதால்தான் அது தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது. ஆண் மயிலின் கண்ணீர் துளிகளால்தான் பெண் மயில் கருவுறுகிறது. மயில்கள் எப்போதும் உடலுறவு கொள்வதில்லை. இதனால்தான் பகவான் கிருஷ்ணரும் துறவிகளும் மயில் தோகையைப் பயன்படுத்துகின்றனர். என்று விளக்கம் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியின் மயில் பற்றிய இந்த புது விளக்கம் அறிவியலுக்கும் உண்மைக்கும் எதிரானது என்று நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.�,