ரஜினி மக்கள் மன்றத்தின் வாட்ஸ் அப் குருப்களில் பிற நபர்களை சேர்க்கக் கூடாது என்று மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகக் கூறி ஒருவருடம் ஆகிவிட்ட நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தில், உறுப்பினர் சேர்க்கும் பணிகளும், அணிகள் உருவாக்கப்பட்டு அதற்கு நிர்வாகிகள் நியமிக்கும் வேலைகளும் படுவேகமாக நடைபெற்று வருகிறது. ரஜினி மக்கள் மன்றம் அரசியல் கட்சி போலவே செயல்படுகிறது. மன்ற நடவடிக்கைகளில் சரியாக ஈடுபடாத நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நிர்வாகிகளை முறைப்படுத்த அந்தந்த மாவட்டங்கள், அணிகளுக்கு என்று தனித்தனியாக வாட்ஸ்அப் குழுக்கள் இயங்குகின்றன.
இந்த நிலையில் வாட்ஸ் அப் குழுவில் இருப்பவர்களுக்கு இன்று (ஜனவரி 8) ரஜினி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “‘மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ் அப் குரூப்களில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும். அப்படி நீக்கப்படும் உறுப்பினர்களை மறு உத்தரவு வரும் வரை குரூப்பில் சேர்க்க கூடாது. ரஜினி மக்கள் மன்ற மாவட்ட, ஒன்றிய, நகர வாட்ஸ் அப் குரூப்களில் பிற மாவட்ட நபர்களை சேர்க்க கூடாது. வாட்ஸ் அப் குரூப்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை மட்டுமே உறுப்பினராக சேர்க்க வேண்டும். வாட்ஸ்அப் குருப்பிற்கு ரஜினி மக்கள் மன்றம் என்று மட்டுமே பெயர் வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்டவர்களும் பிற நபர்களும் வாட்ஸ் ஆப் குருப்களில் இருப்பதால், மன்றத்தின் பணிகளும், முடிவுகளும் வெளியில் பகிரப்படுவதாக வந்த தகவலையடுத்து, இவ்வாறு ரஜினிகாந்த் அறிக்கை விடுத்துள்ளார்.
திடீரென எதற்காக இப்படி ஒரு அறிக்கை வருகிறது, அப்படியானால் இதுவரை ரஜினி பிறப்பித்த உத்தரவுகள் கடைபிடிக்கப்படவில்லையா? என்கிற சந்தேகம் இதன்மூலம் பூதாகரமாக எழுந்துள்ளது.�,