மன்னிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள்!
ஈஷா வகுப்புக்கு வந்திருந்த அமெரிக்கப் பெண்மணி ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயம் இது.
நேற்று காலையில் என் மகளுடன் சண்டை. அவள் என்னை அடித்தாள்; கிள்ளினாள்; கடித்தாள். இரவு தூங்கப்போகும் முன், வழக்கம்போல் எனக்கு முத்தம் கொடுக்க வந்தாள். ‘ஒன்றும் தேவையில்லை’ என்றேன் வெறுப்புடன். ‘இதேபோல் நான் உன்னை அடித்துக் காயப்படுத்திவிட்டு, முத்தம் கொடுக்க வந்தால், நீ என்ன செய்வாய்?’ என்றேன். அவள் சற்றும் யோசிக்காமல், ‘உன்னை மன்னித்துவிடுவேன். என்ன இருந்தாலும் நீ என் அம்மா அல்லவா?’ என்றாள்” – இதைச் சொல்லும்போது அந்தப் பெண்மணிக்குக் கண்ணீர் வந்துவிட்டது.
மன்னிப்பு என்பது அவ்வளவு உணர்ச்சிகரமானது.
ஆனால், என் வாழ்வில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லை. யாரையாவது குற்றவாளி என்று நினைத்தால்தானே மன்னிக்க முடியும்?
அதற்காக என் வாழ்க்கையுடன் யாரும் விளையாடவில்லை என்று அர்த்தமல்ல. என் உயிரைப் பறிக்கும் முயற்சிகள்கூட நடந்திருக்கின்றன. அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அவசியமான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறேனே தவிர, எதையும் குற்றமாக நினைக்கவில்லை. யாரையும் குற்றவாளியாகப் பார்க்கவில்லை.
உண்மையில் மன்னிப்பு என்பதே ஒருவித தந்திரம். அது இன்றைக்கு உலகில் பெரிய வியாபாரமாகிவிட்டது. முக்கியமாக, மேற்கத்திய நாடுகளில் சில மதங்களின் வருவாய்க்கான முக்கிய வழிமுறையாக இருக்கிறது.
ஒருவன் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தான். எதிரில் ஒரு விற்பனையாளன் வந்தான்.
“ஐயா, ஒரு டூத்பிரஷ் வாங்கிக் கொள்ளுங்கள். ஐந்நூறு ரூபாய்.”
“என்னது… பல் தேய்க்கும் பிரஷ் ஐந்நூறு ரூபாயா? கொள்ளையாக இருக்கிறதே?”
“வீட்டில் தயாரித்த சாக்லேட் இருக்கிறது. வெறும் ஐந்து ரூபாய்தான். அதையாவது வாங்கி உதவுங்கள்.”
“இது நியாயமாகத் தெரிகிறது” என்று அவன் ஐந்து ரூபாய் கொடுத்து அதை வாங்கி வாயில் போட்டான். உடனே, ‘த்தூ… த்தூ…’ என்று துப்பினான்.
“ஏய் இதில் கழிவறை நாற்றம் வருகிறதே?”
“அங்கிருந்து எடுத்ததுதான் சார். இப்போது சொல்லுங்கள். வாயைச் சுத்தம் செய்ய டூத்பிரஷ் வேண்டுமா?”
இப்படித்தான், முதலில் உங்களைப் பாவம் செய்தவராக அறிவிப்பதும், பின்னர் அதற்கு மன்னிப்பு வழங்குவதாகத் தெரிவிப்பதும். இதை ஒருவித அரசியல் அமைப்பாகக் காண்கிறேன்.
ஆலயங்களில் நடந்துவந்த அக்கிரமங்களைத் தட்டிக் கேட்டதால்தான், அந்த மதங்கள் உருவாகக் காரணமாக இருந்த மகான்கள் அன்றைய சமூகத்தால் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால், இன்றைக்கு அவர்கள் பெயரைச் சொல்லி பாவங்களுக்கு மன்னிப்பு வழங்குவது ஒரு வணிகமாகவே மாறிவிட்டது.
ஒவ்வொரு மதமும் ஆன்மிக வழிகாட்டியாக விளங்கவே உதித்தது. ஆனால், தலைமுறைகள் மாற மாற, அவை தங்களுக்கெனக் குழுக்களை ஏற்படுத்திக்கொண்டன. அதனால், வெறும் நம்பிக்கைகளாகவும் கடவுள் சொன்னதாக யாரோ மனிதர் எழுதிய ஒழுக்க விதிகளாகவும் மட்டுமே அவை அறியப்பட்டு, ஆதார விஷயங்கள் அடிபட்டுப் போய்விட்டன.
அந்த விதத்தில் இன்றைக்குப் பெரும்பாலான மதங்கள் மற்றவர்களின் குற்றவுணர்வையும், அச்சத்தையும், பேராசையையும் தூண்டியே தங்கள் பிழைப்பை நடத்துகின்றன. ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு, குற்றங்கள் என்று குறிப்பிடும் செயல்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரத்துக்கு அருகே ஒரு மிகப் பெரிய கோயில் இருக்கிறது. சீனக் கோயில் போன்ற பிரம்மாண்டமான அமைப்பு.
அந்தக் கோயிலில், என்னென்ன பாவங்களுக்கு என்னென்ன தொகை செலுத்தி கடவுளிடம் மன்னிப்புப் பெறலாம் என்று பட்டியலாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. அந்நிய நாட்டுப் பணம் என்றால் எந்த விகிதத்தில் கொடுக்க வேண்டும் என்றும் அருகிலேயே குறிப்பிட்டிருந்தார்கள்.
மனிதன் இருக்கும்வரை, பாவங்கள் செய்யாமல் இருக்கவும் போவதில்லை. இந்தக் கோயில்களுக்குப் பணவரத்து குறையவும் போவதில்லை என்று தோன்றியது. முன்பணம் செலுத்தி கடவுளிடம் மன்னிப்பு வாங்கிவிட்டுப் பாவம் செய்யும் வசதி வந்தால்கூட ஆச்சரியம் இல்லை.
ஒருவரை ஏன் குற்றவாளியாகப் பார்க்கிறீர்கள்? அவர் உங்களைப் போல் சிந்திக்கவில்லை. நடந்து கொள்ளவில்லை. உணரவில்லை என்பதால்தானே?
நீங்கள் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்களோ, அப்படி சுதந்திரமாக வாழ விரும்புகிறீர்கள். உங்களைச் சுற்றி உள்ள மற்ற மனிதர்களும் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறார்களோ, எப்படி அறிந்திருக்கிறார்களோ, அப்படி வாழ விரும்புகிறார்கள். அவ்வளவுதானே?
யாரையும் பெருந்தன்மையோடு மன்னித்துவிட்டதாக நினைக்காதீர்கள். அப்படிச் செய்தால், வாழ்நாள் முழுவதும் அவர்களை உங்கள் அடிமைகளாக நினைக்கத் தோன்றும்.
அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பு எழுதாமல் இருப்பது அதைவிடச் சிறப்பல்லவா?
[நீங்கள் உண்மையான நண்பரா?](https://minnambalam.com/k/2019/03/09/28)
�,”