மனித உணர்வுகளைத் திரைமொழிக்குக் கடத்திய மணிரத்னம்

Published On:

| By Balaji

மணிரத்னத்தின் திரைமொழியை விவாதிக்கும் தொடர்: 5 – ஆர்.அபிலாஷ்

மணிரத்னம் படங்களில் இப்படிப் படக்கருவி சுழன்று வந்து இரு எதிர்த் தரப்புகளின் மனவியலைக் காட்டும் பாணி என்பது வெகுவாக அலசப்பட்டது. குறிப்பாக வினோத் வரதராஜன் தனது யூடியூபில் மாவட்ட ஆட்சியாளருக்கும் தேவா, சூர்யாவுக்கும் இடையிலான சமரசக் காட்சியை மிகச் சிறப்பாய் அலசியிருக்கிறார். இக்காட்சியில் முதலில் அர்ஜுன் பேசுகிறான். அப்போது படக்கருவி சுழன்று ஒவ்வொரு நபராகக் காட்டுகிறது. இது அர்ஜுனின் அப்போதைய மனநிலையைக் காட்டுகிறது.

அர்ஜுன் கொந்தளிப்பாக உள்ளான். அவனுக்கு சூர்யா, தேவராஜ் போன்றோரின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை, குறிப்பாக அவனுக்கு சூர்யாவைப் பிடிக்கவில்லை; இந்தத் தனிப்பட்ட வெறுப்பை அவன் இன்னும் வெளிப்படுத்தவில்லை; தான் சட்டரீதியாய், எந்தச் சாய்வும் இன்றி செயல்படுவதாய் நம்பிவருகிறான். ஆனால் உள்ளுக்குள் சூர்யா மீதான கோபம், அருவருப்பு, அவனைத் தடுக்க முடியவில்லையே எனும் வருத்தம் அவனை அலைக்கழிக்கிறது. அவன் தன் நிலைப்பாட்டை சட்டத்தை, ஒழுக்கத்தை நிலைப்படுத்தும் ஒன்றாய்க் காட்டினாலும் உண்மையில் சூர்யா மீதான கோபமே அவனைத் தூண்டுகிறது. இதை அவன் ஏற்கத் தயாராக இல்லை என்பதனாலே படக்கருவியும் ஒரு நிலையில் இன்றி சுழன்று சுழன்று வருகிறது.

ஆனால் சூர்யா “உங்களுக்கு என்ன பிடிக்கல இல்ல?” என்று நேரடியாகக் கேட்டதும், அர்ஜுனுக்கு அதுவரையில் இருந்த குழப்பம் தெளிகிறது; “ஆமாம்” என ஒப்புக்கொள்கிறான். அப்போது படக்கருவி நிலையாகி அவனையும் சூர்யாவையும் மட்டும் திரும்பத் திரும்பக் காட்டுகிறது. இனி பிரச்சினை அர்ஜுனுக்கும் சூர்யாவுக்கும் இடையில் மட்டுமே என உறுதியாக்குகிறது. இப்படித் தத்தளிப்பிலிருந்து நேரடியான நிலையான வெறுப்பாக அர்ஜுனின் மனம் மாறுவதை ஒளிப்பதிவு அற்புதமாய் உணர்த்திவிடுகிறது என்கிறார் வினோத் வரதராஜன்.

**தேவதையிடம் கதைகூறல்**

சூர்யா தன் தாய் தன்னைக் கைவிட்ட கதையைப் படத்தில் சில இடங்களில் சொல்கிறான். குமுறலாக, கோபமாக, ஆற்றாமையாக. எவ்வளவு முறை சொன்னாலும் அவனுக்கு அக்கதை மீது உள்ள வருத்தமும் கசப்பும் தீர்வதில்லை. ஆனாலும் அதைத் திரும்பத் திரும்பச் சொல்லவேண்டிய தேவை அவனுக்கு இருக்கிறது. அது மட்டுமே தன் பிறப்பு பற்றி அவனுக்குச் சொல்ல இருக்கிற ஒரே கதை, ஒரே தகவல், அவனது ஒரே அடையாளச் சுட்டி. பெரும்பாலான அநாதைகளுக்குத் தாம் எப்படி அநாதையாக்கப்பட்டோம் எனும் கதையை அறியவும் அதை மீண்டும் மீண்டும் பேசவும் விருப்பமுண்டு (அது அவர்களைக் காயப்படுத்தும் என்றாலும்) என்பதை நான் படித்திருக்கிறேன், நேரிலும் கண்டிருக்கிறேன். அதே காரணம் தான் சூர்யாவுக்கும்.

முதல் சில முறை காவல் நிலையத்திலும் சிறையிலும் அவன் தன் பிறப்பு பற்றிய முன்கதையைச் சொல்கிறான். அக்கூறல்கள் அவனை மேலும் மேலும் தனிமைக்குள் ஆழ்த்துகின்றன.

இறுதியாக அவன் தன் வளர்ப்பு மகளிடம் இக்கதையைச் சொல்லும் காட்சி வருகிறது. இது ஒரு அற்புதமான மகத்தான காட்சி. கழிவிரக்கமும் விடுதலை உணர்வும் அவனுக்கும் (பார்வையாளனுக்கும்) கிடைக்கும் காட்சி. ஏனென்றால் அவன் இம்முறை கதையை எளிய, உதாசீனம் மிக்க மனிதரிடம் அல்ல, ஒரு தேவதையிடம் சொல்கிறான். ஆம், அந்த குழந்தை இப்படமெங்கும் ஒரு தேவதையாகத் தான் குறிக்கப்படுகிறாள். இது சூர்யா கடவுளிடமே தன் வாழ்க்கையைப் பற்றி முறையிடுவதாய், கலங்குவதாய், பின்னர் பரவாயில்லை என ஆறுதலும் மகிழ்ச்சியும் கொள்வதாய் வேறொரு பரிமாணம் தரும் காட்சி. இந்தத் தெய்விக உணர்வு இந்தக் காட்சி ஒளியமைக்கப்பட்ட விதத்தில் வந்துவிடுகிறது. இத்தனைக்கும் கோயில் பின்புலத்திலோ, தெய்விகப் பாடல் பின்னணியிலோ இக்காட்சி அமையவில்லை. மணிரத்னம் இக்காட்சியை சூர்யாவின் வீட்டு மொட்டை மாடியில்தான் அமைக்கிறார்.

ஆனால், படத்தில் முதன்முறையாய் அகண்ட நீல வானம் வருகிறது (வழக்கமாய் செவ்வானமே படம் முழுக்க வருகிறது). வானத்தின் கீழ் அந்த தேவதைக் குழந்தையும் சூர்யாவும். பின்னணியில் பத்மா, கொடியில் துணியைக் காயப் போட்டுக்கொண்டிருக்கிறார். சூர்யாவின் அம்மா யார் எனும் அந்தக் குழந்தையின் கேள்விகளும் அதற்கு சூர்யா அளிக்கும் பதில்களும் ஒரு பிரார்த்தனை போன்றே அமைகின்றன. தன் கைவிடப்படலை, தனது தனிமையை, துயரத்தைப் பேசி விட்டு சூர்யா, “இதையெல்லாம் இப்போ இந்த மகராசி கிட்டே இருக்கேன்” எனச் சொல்லிக் கலங்கிய கண்களும் மகிழ்ச்சியான முகமுமாய் கட்டி அணைக்கிறான். அந்தக் குழந்தையின் அருகில் எந்தத் துயரமும் இழப்பும் பொருட்டல்ல எனும் நம்பிக்கையும் உவகையும் அவனிடம் வெளிப்படுகின்றன.

இதை இந்தப் படத்தில் குழந்தைகள் வரும் பிற இடங்களுடன் ஒப்பிடலாம். சில காட்சிகளில் சூர்யா செய்யும் குற்றங்களைக் குழந்தைகள் சிறு அச்சத்துடன் திகைப்புடன் வேடிக்கை பார்ப்பதாய், அதே சூர்யா பின்னர் பத்மாவை மணந்து தன் வீட்டுக்கு அழைத்து வருகையில் உற்சாகமாய் துள்ளிக் குதித்து அவனை வரவேற்பவர்களாய் படம் முழுக்கக் களங்கமின்மையின், எதிர்கால நம்பிக்கையின் உருவகமாக இருக்கிறார்கள். இந்தக் காட்சியில் குழந்தை தெய்விகத்தின் ஒரு சிறு துளியாய் வந்து சூர்யாவின் கைக்குவளையில் விழுகிறாள். இந்தக் காட்சிக்கு இப்படி ஒரு உபபிரதி (subtext) தோன்றக் காரணம், எளிய காட்சியான இது ஒரு மேலான கவிதையாய் விரியக் காரணம், இதன் பின்னணி அமைக்கப்பட்ட விதம். பின்னணியில் வானத்துக்கு பிரதான இடமளித்து சட்டகம் வைக்கப்பட்ட முறை. சந்தோஷ் சிவனும் மணிரத்னமும் சேர்ந்து ஒரு காட்சியைப் பல பரிமாணங்கள் கொண்ட கவிதையாய் உருமாற்றியிருக்கும் மாயம் இது.

**கண்ணாடி பிம்பக் காட்சிகள்**

மணிரத்னத்தின் திரைமொழியின் ஒரு முத்திரை அம்சம் கண்ணாடி பிரதிபிம்பங்கள். அவரது நாயகன் / நாயகி சுயபரிசீலனை செய்யும்போது, வாழ்க்கையில் முடிவெடுக்க தடுமாறி சிந்திக்கும்போது அவர்கள் கண்ணாடி முன் நிற்பதாய் அவர் காட்டுவார். மௌன ராகம் படத்தில் ரேவதியைப் பெண் பார்க்க வரும் போது அவர் விருப்பமின்றி கலந்துகொள்கிறார். அப்போது அம்மா அவரை அலங்கரித்து விடுகிறார். ரேவதி கண்ணாடி முன் அமர்ந்து தன் வாழ்க்கைக் குழப்பங்களை, தத்தளிப்புகளை மனதில் உருப்போடுகிறார் என்பதை அந்தக் கண்ணாடி பிரதி பிம்பம் மூலம் மணிரத்னம் காட்டுவார்.

தளபதியில் சூர்யாவின் வாழ்வில் வரும் நெருக்கடியான இரு சந்தர்ப்பங்களில் இத்தகைய காட்சி அமைப்பு வருகிறது. ஒன்று, அவரால் கலவரத்தை அடக்க முடியாமல் போக அவரை இடமாற்றம் செய்கிறார்கள்; அச்செய்தியை அவர் தொலைப்பேசியில் அறியும் தருணம். அப்போது அவரது கண்ணாடி பிரதி பிம்பத்தை அம்மாவும் அப்பாவும் எஸ்.பியும் மெல்ல மெல்ல சூழ்கிறார்கள். ஒருபக்கம் தேவராஜ் மற்றும் சூர்யாவை அழிக்கும்படி எஸ்.பி தரும் அழுத்தம், இன்னொருபக்கம் பெரும் பாவம் செய்யாதே என அம்மாவும் அப்பாவும் தரப் போகும் நெருக்கடி. நடுவே அவர் தனது லட்சியத்திலிருந்து மெல்ல மெல்ல வழுவி தோல்வியைத் தழுவப் போகும் துயரத்தில். இதன் தொடர்ச்சியான காட்சியில் தேவராஜ் மற்றும் சூர்யாவை கலிவர்த்தனின் ஆட்களைக் கொண்டு கொல்ல எஸ்.பி ஆட்சியாளருக்கு அறிவுரை நல்க, அதற்கு சூர்யா கிட்டத்தட்ட ஆமோதிக்க, அவன் அம்மா அப்போது வந்து அவன் காலில் விழுந்து அதைச் செய்ய வேண்டாம் என மன்றாடுகிறாள். அந்த மன்றாடலின் தருணத்தில் மீண்டும் காட்சி இரண்டாகிறது – ஒருபக்கம் நிஜம்; மற்றொருபக்கம் கண்ணாடியில் பிரதிபிம்பம். சூர்யா தன் தம்பி என அறிய வரும் அர்ஜுன் சட்டென தெளிவான முடிவெடுக்கிறான். தன் அண்ணனுக்கு ஏதும் ஆகக் கூடாது என ஆணை பிறப்பிக்கிறான். அவன் குழப்பம் விலகுகிறது. அத்தோடு பிரதிபிம்பங்கள் காட்சி அமைப்பிலிருந்து நீங்குகின்றன.

இந்தப் படத்தில் பல குறைகள் உண்டு. மிகை உண்டு. மெலோ டிராமா உண்டு. குற்றவுலகம் குறித்த யதார்த்தமான சித்திரிப்பு இந்தப் படத்தில் இல்லை; தேவராஜின் நிழலுலகச் செயல்பாடுகள் ஏதோ மளிகைக்கடை வியாபாரம் போல சித்திரிக்கப்பட்டுள்ளன; இதே உலகை இன்னும் தீவிரமாய் நியாயமாய் சத்யாவில் காட்டியிருப்பார் ராம் கோபால் வர்மா. ஆனால் மணிரத்னத்தின் கவனம், குற்றத்தை ஆவணப்படுத்துவதிலோ, புதிய கோணத்தில் அணுகுவதிலோ இல்லை; குற்றவுலகம் இந்தப் படத்தில் ஒரு பின்னணி மட்டுமே. சரி தவறு எனும் இருமைக்கு அப்பால் மனித உறவுகள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆட்படுவதை, நட்பு, தாய்-மகன் உறவுக்கு இடையிலுள்ள தத்தளிப்பு, நாடகீயம், நகைமுரண் செயல்படும் விதங்களைச் சித்திரிப்பதிலே மணிரத்னத்துக்கு ஆர்வம் அதிகம். அவர் என்றுமே மனித உறவுகளின் நிறங்களைப் படம் பிடிக்கும் கலைஞர் தானே. இந்த அம்சத்தை தன் திரைமொழி மூலம் அவர் மிகுந்த கலை நுணுக்கமும் உட்பிரதிகளும் கொண்ட படைப்பாக்கியிருக்கிறார் என்பதே தளபதி படத்தின் சிறப்பு.

[பகுதி 1](https://minnambalam.com/k/2019/02/11/6)

[பகுதி 2](https://minnambalam.com/k/2019/02/18/3)

[பகுதி 3](https://minnambalam.com/k/2019/02/25/7)

[பகுதி 4](https://minnambalam.com/k/2019/03/04/10)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share