தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த ஆண்டில் ஆள் சேர்ப்பு நடவடிக்கை மிக மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டில் வழக்கத்தை விடக் குறைவான அளவில்தான் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று மனிதவளத் துறை நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனம் ஒன்றின் மனிதவள அதிகாரி *தி ஃபினான்சியல் கிரானிக்கல்* ஊடகத்திடம் இதுகுறித்துப் பேசுகையில், “சில வருடங்களுக்கு முன்னர் ஆள் சேர்ப்புப் பணிக்காக நாங்கள் தினசரி ஒரு மணி நேரம் வரையில் செலவிட்டோம். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. வேலையில்லா வளர்ச்சி என்பதுதான் இப்போது தொழில்களுக்கான புதிய மந்திரமாக உள்ளது. திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றில்தான் இப்போது அதிகக் கவனம் செலுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் 20 முதல் 25 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்ததாகவும், இப்போது ஒற்றை இலக்கமாகக் குறைந்துவிட்டதாகவும் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். பெங்களூருவை மையமாகக் கொண்ட வேலைவாய்ப்பு நிறுவனமான *லீடர்ஷிப் கேபிட்டல்* முதன்மைச் செயலதிகாரி பி.எஸ்.மூர்த்தி கூறுகையில், “இந்த ஆண்டில் புதிய வேலைவாய்ப்புகள் என்பது மிகவும் மந்தமாகவே இருக்கும். இதே நிலை அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும். மேற்கத்திய சந்தைகள் மந்த நிலையைச் சந்தித்தால்தான் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.
சென்னையை மையமாகக் கொண்ட ஐடி வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த பல்லவி நாயர் பேசுகையில், “அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலையில்லா வளர்ச்சியையே கொண்டிருக்கும் என்று நான் கருதுகிறேன். நிறுவனங்களில் ஏற்கெனவே போதிய அளவு ஆட்கள் பணியில் இருப்பதாலும், அவர்களுக்கான திறன் மேம்பாட்டில் நிறுவனங்கள் அதிகக் கவனம் செலுத்துவதாலும் புதிய வேலைகளுக்கு அதிக வாய்ப்பில்லை” என்றார்.�,