-சப் அந்தோணி காத்தியா
நாடாளுமன்றத்தில் முதலில் தாக்கல் செய்யப்பட்ட 2015-16 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையாக இருந்தாலும் சரி, தொடர்ந்து தாக்கலான 2016-17 நிதிநிலை அறிக்கையானாலும் சரி நமது நாட்டின் அடித்தட்டில் வாழும் சாமானிய மக்கள் பிரிவினருக்கு ஆதரவான பல அம்சங்களைக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வை அளித்தன. ஆனால், அந்த இரண்டு ஆவணங்களையும் கவனமாக ஆய்வு செய்யும்போது, மூல வளங்கள் திரட்டுவதில் மிகத் தந்திரமான முறையில் மாற்றங்கள் செய்திருப்பதும், மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதிச் சுமைகள்-குறிப்பாக ஆரோக்கியம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவற்றுக்கான நிதிச்சுமைகள்-மாநில அரசுகளின் தோளில் மேலும் சுமத்தப்பட்டிருப்பது தெரிகிறது. இதன் விளைவு என்னவென்றால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 36.6 விழுக்காடாக உள்ள குழந்தைகள், சிறார்கள் கடுமையாகப் பாதிக்கப்படவுள்ளார்கள்.
மேற்கூறிய பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இரண்டிலும் ஆரோக்கியம் (உடல்நலம்) மற்றும் கல்வி ஆகிய இரண்டே இரண்டு துறைகள்குறித்து கூறப்பட்டுள்ளவற்றை ஆய்வு செய்யலாம்.
கல்வி
சமூக மாற்றத்தின் திறவுகோல் கல்வி. அதிலும் குழந்தைகளுக்கான தொடக்கக் கல்வி என்பது குழந்தையின் ஒட்டுமொத்த நலனில் ஆகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதனால், அனைத்து வயதுப் பிரிவுகளின் குழந்தைகளுக்கும் சமமான, தரமான கற்றலை உறுதிப்படுத்த பெருமளவிலான முதலீடுகள் அவசியமாகிறது, இளம் சிறார்களுக்கான மேம்பாட்டுப் பணிகளுக்கும், பராமரிப்புக்கும் இதன் பங்களிப்பு அதிகம். இதற்கான முக்கியத் திட்டமான ‘ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுப் பணிகள்’ ((ஐ.சி.டி.எஸ்) திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, கடந்த ஆண்டே வெகுவாகக் குறைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டும் வெட்டப்பட்டுள்ளது. இதனால், ஐ.சி.டி.எஸ். திட்டத்தின் முக்கிய அங்கங்களான குழந்தைகள் பாதுகாப்பகம் (கிரீச், பால்வாடி), முன்பருவப் பள்ளிகள் போன்ற திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கநேரிடும்.
2015-16 பொருளாதார ஆய்வறிக்கை, மிகத் தெளிவாக அறிவுறுத்தும் முக்கியச் செய்தி என்னவென்றால் உடல்நலம், கல்வி போன்ற பொதுமக்களுக்கான அடிப்படைச் சேவைகள் தரம் கடுமையாக வீழ்ச்சியடையும். இனி, இத்தகைய சேவைகளுக்கு பொதுமக்கள் தனியார் துறைகளையே சார்ந்திருக்க வேண்டும். 2007ல் 72.9% ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்ப்பு, 2014ல் 63.1% ஆக வீழ்ச்சிகண்டிருப்பதில் (கல்வி அறிக்கையின் ஆண்டுநிலை ஏஎஸ்.ஈஆர், 2014) இருந்தே இதை உணரலாம்.
கல்விக்கான ஒதுக்கீட்டில் நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.71,139 கோடி ஒதுக்கியுள்ளது. இது, கடந்த ஆண்டைவிட 7 சதவிகிதம் அதிகம். ஆனால், சர்வ சிக்ஷ அபியான் திட்டத்துக்கான ஒதுக்கீடு இந்த அளவுக்கு அதிகரிக்கப்படாமல் சிறிதளவே அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், நிதி எங்கே செல்கிறது?. 62 புதிய நவோதயா பள்ளிகளும், தனியார், அரசுத் தரப்பில் உலகத்தரத்திலான தலா பத்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நல்லதுதான். தற்போதைய தேவை என்பது தரமான கல்வி அனைவருக்கும் சமமாக கிடைக்கச் செய்வதுதான். அதற்கு, இந்த நவோதயா பள்ளிகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் எந்த அளவுக்கு உதவும் என்பது தெரியவில்லை.
நாடுமுழுவதும் 1 லட்சத்து 45ஆயிரத்து 807 தொடக்கப் பள்ளிகள் (வகுப்பு 1 முதல் 8 வரை) உள்ளன. இதில், 74.47 விழுக்காடு அரசுப் பள்ளிகள் ஆகும். இவற்றில், 11 கோடியே 89 லட்சத்து 73ஆயிரத்து 934 குழந்தைகள் கற்கிறார்கள். இப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைத்துக் குழந்தைகளும் எழுத, வாசிக்கக் கற்றுக்கொள்ளும்வகையில் ஆற்றல் தகுதியை உறுதிப்படுத்துவதும் அவசியமில்லையா?
மத்தியப்பிரதேச மாநிலம், ஒரு குழந்தைக்கு ரூ. 37 செலவளிக்கிறது, ராஜஸ்தான் ரூ. 40 செலவளிக்கிறது என்கிறது முறையாகத் தொகுக்கப்படாத தரவுகள். ஆனால், தலைக்கு இவ்வளவு அதிகமாகச் செலவளிக்கிறோம் என, ஆய்வறிக்கை புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டுவது விளைவுகளையோ, சாதனைகளையோ உத்தரவாதப்படுத்துவதாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே, செலவை திறமையாகத் திட்டமிடுவதும் சமமான முக்கியத்துவம் பெறுகிறது. எப்படியிருந்தாலும், போதுமான முதலீடு இல்லாவிட்டால் தரம் வீழ்ச்சியடையும். ஊரக அரசுப் பள்ளிகளில் பயிலும் சிறார்களில், ஐந்தாம் வகுப்பில் பயிலும் சிறார்களைப் பொறுத்தவரை 2007ல் 41% ஆக இருந்தது, 2014ல் பாதியாக வெறும் 20.7%ஆகக் குறைந்திருக்கிறது (மேற்குறிப்பிட்ட அறிக்கை 2014). தனியார் பள்ளிகளிலும்கூட இதே மாணவர்கள் நிலை 2007ல் 49.4% ஆக இருந்தது, 2014ல் 39.3%ஆகக் குறைந்திருக்கிறது. ‘அரசுப் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு மாற்றப்படுகிறார்கள் என்றால் அது, அரசுப் பள்ளிகள் தரமில்லாமல் இருப்பதால்தான்’ என்று, அக் கருத்தாய்வு கூறுகிறது. ஏன், இந்த தரக்குறைவு ஏற்படுகிறது? ஏனென்றால், ‘அது இலவசக் கல்வி அல்லது குறைந்தகல்வி என்பதால்தான் தரம் பராமரிக்கப்படுவதில்லை’ என்பதற்கு, வேறு உதாரணங்கள் எதுவும் தேடவேண்டியதில்லை என்று அந்த ஆய்வறிக்கை உறுதிபடக் கூறுகிறது. ஏழைகள் பணமில்லாததால் அரசுப் பள்ளிகளில் சேர்வதுதான் பிரச்சினை என்கிறதா ஆய்வறிக்கை? கல்விக்கான ஒதுக்கீட்டை வெறும் மானியமாக மட்டும் பார்க்கப்போகிறோமா? எனவே, கல்விக்கு மிகப்பெரிய முதலீடு தேவைப்படுகிறது என்று அறிவிக்கும்போது அது, அனைவருக்கும் சமமான இலவசக் கல்வி அவசியம் என்பதை உணர்த்தவில்லையா?
ஆரோக்கியம் (உடல்நலம்)
கல்வியைப் போலவே, உடல் நலத்துக்கான ஒதுக்கீடும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2%க்கும் கீழே குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிநபர் உடல்நலனுக்காகவும் அரசு ஒதுக்கும் நிதி அடிப்படையில் தனிநபர் உடல்நலம் பேணல் தரக்குறியீடுகளை உருவாக்கியுள்ள உலக வங்கி அறிக்கையில் இந்தியா 157வது இடம் என்ற அதளபாதாளத்தில் இருப்பதையும் பசியால் வாடும் நாடுகள் பட்டியலில் இந்தியா 25வது இடத்தில் இருப்பதையும் இதே ஆய்வறிக்கை ஒப்புக்கொள்கிறது.
ஊட்டச்சத்துக் குறைவால் அவதியுறும் குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா, இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பதையும் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவில் 19.46 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் 15 மாநிலங்களில் 37% குழந்தைகள் (5 வயதுக்கு உட்பட்டவர்கள்) ஊட்டச்சத்து குறைவானவர்கள் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கையை ஐந்து விழுக்காடு அளவுக்குக்கூட குறைக்க முடியவில்லை. இதிலும் பீகார், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இது, தலா 48, 42 விழுக்காடுகள் என்றநிலையில் பயமுறுத்துகிறது. இச் சிறார்களுக்கு போதிய நுண்ணூட்டச் சத்துணவு கிடைக்கப்பெறவில்லையென்றால் அவர்கள் முழு உடல் தகுதி பெறமுடியாது. மதிய உணவுத் திட்டங்களுக்கு 5% உயர்த்தி ரூ. 463.6 கோடி ஒதுக்கப்பட்டிருந்தாலும், ஐசிடிஎஸ் திட்டங்களுக்கு எந்த ஒதுக்கீடும் காணப்படவில்லை என்பது கவலையளிக்கிறது.
அனைத்து பருவத்தினருக்கும் ஆரோக்கிய வாழ்வை உறுதிப்படுத்துவதும், நல வாழ்வை மேம்படுத்துவதும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. இந்த நிலையை முழுமையாக அடையவேண்டுமானால் உடல்நலத் தரநிலை 0.9 என்ற நிலையை எட்டவேண்டும். இதற்காக, மொத்த ஜிடிபி-யில் குறைந்தது ஒரு விழுக்காடு மற்றும் மொத்த ஆரோக்கியச் செலவுகளில் 33% ஒதுக்கப்பட வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ரூ. இலட்சம்வரை மருத்துவச் செலவுகளை வழங்குவது அறிவிக்கப்பட்டிருந்தாலும், குழந்தைகள் மற்றும் வளர்பருவத்தினர் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான நிதி அதிகரிக்கப்படவில்லை. இதனால் எதிர்மறையான விளைவுகளே ஏற்படும். நோய் வரும்முன் காப்பதை, வந்தபின் செலவளிப்பது எதிர்காலத்தைப் பாதுகாக்காது.
எனவே மேற்கூறிய ஆவணங்களை ஆய்வு செய்ததில் இந்த மோடி அரசு, நாட்டில் பெருவாரியான எண்ணிக்கையில் உள்ள அடித்தட்டு மக்களின் கல்வி, ஆரோக்கியம் குறித்துக்கூட கவலை கொள்ளவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
(கட்டுரையாளர்: ஜோசப் அந்தோணி காத்தியா,
டில்லியில் செயல்படும் மூத்த பத்திரிகையாளர், குழந்தைகள் உரிமைகளுக்காக நீண்டகாலமாகப் பணியாற்றி வருகிறார்.)
http://www.countercurrents.org/gathia160316.htm�,