திமுக கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், “எந்த ரூபத்தில் வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி, வேதாந்தா ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு தமிழகம் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக நேற்று மக்களவையில் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் இன்று (ஜூலை 16) ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். கொள்கை முடிவெடுத்து மக்களுக்கு அறிவித்தால்தான் அவர்கள் மூச்சு விட முடியும். எனவே மக்கள் நிம்மதியாக இருக்க இந்த கூட்டத் தொடரிலேயே கொள்கை முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சர் பேசியதன் அடிப்படையிலேயே இந்தக் கேள்வியைக் கேட்பதாகவும் தெரிவித்த ஸ்டாலின், “புதிய ஏலக் கொள்கையின் அடிப்படையிலேயே ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் ஏலம் விடப்படுகிறது. அதனை தடுக்க சட்டத்தில் இடமுள்ளது” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், “தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க முடியாது. அந்தத் திட்டம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. அரசியலுக்காக போராட்டம் நடத்தி தாமாகவே சிறைக்கு செல்பவர்களை நாங்கள் தடுக்கமாட்டோம்” என்று கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின், “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடுபவர்களை கொச்சைப்படுத்துவது அழகல்ல” என்று அதிருப்தி தெரிவித்தார். அதற்கு, “கொச்சைப் படுத்தும் நோக்கத்தில் பேசவில்லை. திட்டத்தை சட்டரீதியாக தடுத்து நிறுத்த நமக்கு உரிமை இருக்கிறது. மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்த முனைந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடமுள்ளது. அப்படி இருக்கும்போது எதற்காக போராட்டம் நடத்த வேண்டும்” என்று பதிலளித்தார் சி.வி.சண்முகம்.
**
மேலும் படிக்க
**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
�,”