மத்திய அமைச்சர் மீது சி.வி.சண்முகம் கிரிமினல் வழக்குத் தொடர்வாரா?

Published On:

| By Balaji

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கிரிமினல் வழக்கு தொடர்வாரா என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஜூலை 1ஆம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் வலுக்கட்டாயமாக எதையும் செய்யமாட்டோம், தமிழகத்தில் அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, ஆலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் நேற்று முன்தினம் அவரது முன்னிலையிலேயே தமிழகத்தில் மேலும் நான்கு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இதற்கிடையில் சட்டமன்றத்தில் பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாநில அரசின் ஒப்புதல் இன்றி எந்த திட்டத்தையும் கொண்டு வந்தால் மத்திய அரசு மீது கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் மீண்டும் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது சி.வி. சண்முகம் கிரிமினல் வழக்குத் தொடர்வாரா என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஜூலை 17) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டமன்றத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முதன் முதலில் அனுமதி அளித்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் என்று கூறி, காங்கிரஸ் – தி.மு.க. மீது குற்றம்சாட்டி, பிரச்சினையைத் திசைதிருப்ப அ.தி.மு.க. அமைச்சர் சி.வி. சண்முகம் கடுமையாக முயற்சி செய்திருக்கிறார். இது முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கின்ற முயற்சியாகும். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட நாள் 30 ஜூன் 2015. ஆனால், இந்த நாட்களில் மத்தியில் ஆட்சி செய்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசா ? பா.ஜ.க. அரசா ? என்பதை அமைச்சர் சி.வி. சண்முகம் தெளிவுபடுத்துவாரா ? இந்த அனுமதியை வழங்குகிற வகையில் 24 பரிசோதனை கிணறுகளைத் தோண்ட திருவாரூர், திருமருகல், குடவாசல், பகுதிகளில் அனுமதி அளித்தது மத்திய பா.ஜ.க. அரசு. அதை தடுத்து நிறுத்தாமல், கண்டும் காணாமலும் இருந்தது தமிழக அ.தி.மு.க. அரசு” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

”தமிழகத்தில் மேலும் நான்கு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதற்காக, தமிழகத்தில் கடலூர் மாவட்டம் புவனகிரியிலும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் நாகை மாவட்டம் மாதாணம் ஆகிய இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஓஎன்ஜிசியும், வேதாந்தா நிறுவனமும் கையொப்பம் இட்டிருக்கிறது. இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கூறியதற்கு அ.தி.மு.க. அமைச்சர் சி.வி. சண்முகம் நேரிடையாக பதில் கூற தயாராக இல்லை.

தமிழக அரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை இருக்கிறது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறுகிறார். தமிழகத்தில், கூடுதலாக கிணறுகள் தோண்டுவதற்கு புதிதாக ஒப்பந்தம் போட்டிருக்கிற மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீதும், வேதாந்தா நிறுவனத்தின் மீதும் எப்போது கிரிமினல் நடவடிக்கையை அமைச்சர் சண்முகம் எடுக்கப்போகிறார்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share