ரூ.175 கோடி வரி ஏய்ப்பு செய்த கட்டுமான ஒப்பந்ததாரர்கள்!

Published On:

| By Balaji

கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்குத் தொடர்பான 18 இடங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 175 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான வீடுகள் நிறுவனங்கள் உள்ளிட்ட 18 இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் பணப்பட்டுவாடா நடக்க இருப்பதாகவும், தொழில் நிறுவனங்களிடமிருந்து இந்த பணம் கைமாற இருப்பதாகவும் கிடைத்த தகவலை அடுத்து சோதனையில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்கள் நடந்த சோதனையில் கணக்கில் வராத வருவாய் 175 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 20 சதவிகித வருவாயை 2 சதவிகிதத்துக்கும் கீழ் குறைத்துக் காட்டி, 100க்கும் மேற்பட்ட துணை ஒப்பந்ததாரர்கள் மூலம் சட்ட விரோத பண பரிவத்தனை செய்தது இந்த சோதனையில் தெரியவந்திருக்கிறது.

இதில் வரி ஏய்ப்பு செய்தவர்களில் ஒருவர் மதுரையைச் சேர்ந்த வெற்றி எனவும், இவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரனின் உடன் பிறந்த சகோதரர் என தகவல்கள்  தெரிவிக்கின்றன.  மதுரை, தேனி, போடி ஆகிய பகுதிகளில் வெற்றிக்கு சொந்தமான திரையரங்கு, கட்டுமான நிறுவனம் மற்றும் எரிபொருள் விற்பனை நிலையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இவர் அரசுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share