மதுரை ஆட்சியர் அலுவலகம்: பெண்கள் தீக்குளிக்க முயற்சி!

Published On:

| By Balaji

ஊரை விட்டு ஒதுக்கி வைத்து மிரட்டுவதாகக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லைத் தீக்குளிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவம் அதிகரித்துவருகிறது. மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் இன்று (நவம்பர் 7) 3 குழந்தைகள் மற்றும் உறவினர்கள் முல்லைக் கொடி, பவுன் ராணி ஆகியோருடன் மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து புகார் கொடுக்கக் காத்திருந்தார். சிறிது நேரத்தில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயைக் குழந்தைகள் மீதும் தன் மீதும் ஊற்றித் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

இதைக் கண்ட காவல் துறையினர் திவ்யா தீக்குளிக்க முயன்றதைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் அனைவரையும் தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திவ்யா கூறியதாவது, “நானும் எனது கணவரும் காதலித்துக் கலப்புத் திருமணம் செய்துகொண்டோம். நான்கு மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் என் கணவர் இறந்துவிட்டார்.

குடும்பத்தை நடத்த சிரமப்பட்டுவரும் நிலையில் எங்கள் வீட்டை அபகரிக்க அப்பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், சேகரன் ஆகியோர் முயல்கின்றனர். எங்கள் குடும்பத்தைப் பற்றி அவதூறு பரப்புகிறார்கள். என்னுடைய அத்தையைக் கஞ்சா விற்றதாகக் கூறிச் சிறைக்கு அனுப்பினர்.

தற்போது எங்களை ஊர் விலக்கம் செய்துவிட்டனர். பொதுக் குழாயில் தண்ணீர் எடுக்க அனுமதி மறுக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு எங்கள் வீட்டுக்கு வந்த கும்பல் ஒன்று ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்தது.

இது குறித்து நான் இன்று காலை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இதை அறிந்து மீண்டும் என்னுடைய வீட்டுக்கு வந்து, விபச்சாரம் செய்வதாகப் புகார் கூறுவோம் என்று மிரட்டினர். இந்த மன உளைச்சலால் தீக்குளிக்க முயன்றோம்”.

இவ்வாறு திவ்யா காவல் துறையினரிடம் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel