�மதுரை மாவட்டத்தில் 10 ஆயிரம் தனிநபர் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படவுள்ளன.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 8.74 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் ஒரு நபர் கார்டு மட்டும் சுமார் ஒரு லட்சம் உள்ளன. இந்த கார்டுகளை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுவரை 10 ஆயிரம் தனிநபர் ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த கார்டுகள் ரத்து செய்யப்படவுள்ளன.
தமிழகம் முழுவதும் பழைய ரேஷன் கார்டுகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு கடந்தாண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் உணவு பாதுகாப்புச் சட்டத்தைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. இதனால், ரேஷனில் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கான மானியத்தை மத்திய அரசு படிப்படியாகக் குறைத்து வருகிறது. ஸ்மார்ட் கார்டு உள்ள அனைவருக்கும் சர்க்கரை, அரிசி, கோதுமை, பாமாயில், பருப்பு ஆகியவை மானிய விலையில் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டது. இதனால், கார்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்க தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்திற்கு நபர் ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. ஒரு வீட்டில் ஒரு நபர் மட்டும் இருந்து அவருக்கு கார்டுக்கு இருந்தால் தொடர்ந்து பொருட்கள் வழங்கப்படும். ஒரே வீட்டில் ஒரு நபருக்கு ஒரு கார்டும், மற்ற உறுப்பினர்களுக்கு ஒரு கார்டு இருந்தால், அந்த கார்டை ரத்து செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் 10 வட்டார வழங்கல் அலுவலகம் உள்ளது. ஒவ்வொரு அலுவலகத்திலும் குறைந்தது 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை தனிநபர் ரேஷன் கார்டு உள்ளன என்றார்.�,