மக்களவைத் தேர்தலுக்காக மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி என்னவென்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என வைகோ தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது பற்றி அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதன்படி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அவ்வகையில், இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த மதிமுக செயலாளர் வைகோ, துரைமுருகன் தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்து பேசினார். அப்போது மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி குறித்து வைகோவிடம் தெரிவிக்கப்பட்டது.
திமுகவின் தொகுதி ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்ட வைகோ அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “மதிமுக போட்டியிடும் தொகுதி என்னவென்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முறையாக அறிவிப்பார்” என்று தெரிவித்தார். மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீட்டுக்காக அறிவாலயம் வந்த அக்கட்சி பொதுச்செயலாளர் காதர் மொய்தீன் ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொண்டார். தங்களுக்கு எந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.
�,