தலித்துகளை இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்வதை எதிர்த்த பாமகவின் முன்னாள் நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இப்பகுதியில் உடனடியாக அமைதியை நிலைநாட்டுமாறு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் மேலத்தூண்டி விநாயகம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர். இவர் திருபுவனம் பகுதியில் நிகழ்த்தப்பட்டு வந்த மதமாற்றத்தை கடுமையாக எதிர்த்து வந்தார். இப்பகுதியில் உள்ள தலித் மக்களை சிலர் முஸ்லிம் மதத்துக்கு மாற்றுவதாக வந்தத் தகவலை அடுத்து அவர் அப்பகுதியில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் சிலரிடம் கடந்த செவ்வாயன்று பகலில் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
இதையடுத்து அவர் திருபுவனத்தில் உள்ள தனது வாடகைப் பாத்திரக் கடைக்கு சென்றுவிட்டார். அன்று இரவு அவர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் முஸ்லிம் தெருவில் சிலர் அவரை ஒரு காரில் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை கும்பகோணம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கிருந்து தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அங்கே ராமலிங்கம் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
“மதமாற்றத்தை எதிர்த்ததற்காக ஒருவரை கொடூரமாக படுகொலை செய்வதை மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய செயல்கள் மனிதகுலத்திற்கு எதிரானவை. மத நல்லிணக்கத்தைக் குலைத்து மத மோதலை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது. இராமலிங்கம் படுகொலை குறித்த வழக்கின் விசாரணையை சிறப்பு புலனாய்வுப் படையை அமைத்து மேற்கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். கொல்லப்பட்ட இராமலிங்கம் குடும்பத்தினருக்கு பா.ம.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இராமலிங்கம் படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
பாஜக தலைவர் தமிழிசையும் இதைக் கண்டித்துள்ளார். திருபுவனம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.�,