“கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்” என்ற அம்பேத்கரின் வாசகத்துடன் ட்ரெய்லர் தொடங்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமின் முதல் படமான கற்றது தமிழ் படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்து அவரின் பல படங்களில் பணிபுரிந்தவர் மாரி செல்வராஜ். தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்கிற சிறுகதைத் தொகுப்பின் மூலம் எழுத்துலகிலும், திரையுலகிலும் கவனம்பெற்ற மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகக் கவனம் பெறவுள்ளார்.
நெல்லை மக்களின் மண் சார்ந்த கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தை பா.இரஞ்சித் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன் மூலம் தயாரிக்கிறார். கதிருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் கறுப்பி என்கிற நாய் நடித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு படத்தில் இடம்பெற்ற ‘ஏய் கறுப்பி’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம், எப்போது வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்குத் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் ட்விட்டரில் அதற்கான பதிலை பகிர்ந்துள்ளார். அதில் பரியேரும் பெருமாள் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸாகும் என்றும், வரும் 9ஆம் தேதி இசை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படமும் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸாகிறது. இதனால் மணிரத்னம் படத்துடன் பா.இரஞ்சித் படம் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது.�,”