E
கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிவரும் தேவராட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மஞ்சிமா அடுத்ததாக ஜீவா, அருள் நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜீவாவின் குடும்ப நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜித்தன் ரமேஷ் புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறார். ஜீவா, அருள் நிதி இணைந்து நடிப்பதாக ஏற்கெனவே [மின்னம்பலத்தில்](https://www.minnambalam.com/k/2018/11/15/53) பதிவு செய்திருந்தோம். மாப்ள சிங்கம் படத்தை இயக்கிய ராஜ சேகர் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். நட்பை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் இணைந்துள்ளார். இது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 90ஆவது படமாகும்.
இரண்டு கதாநாயகர்களில் மஞ்சிமா யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது இன்னும் வெளியாகவில்லை. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, அபிநந்தன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவுள்ளார். தற்போது ஆரம்ப கட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் டிசம்பர் 13ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
ஜீவா அறிமுக இயக்குநர் காளிஸ் இயக்கத்தில் நடித்துள்ள கீ திரைப்படத்தின் பணிகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகிவரும் ஜிப்ஸி படத்தின் படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளன. டான் சாண்டி இயக்கும் கொரில்லா படமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அருள் நிதி கைவசம் புகழேந்தி எனும் நான், பரத் நீலகண்டன் இயக்கும் படம் ஆகியவை உள்ளன.
�,