ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு பிரான்ஸ் நாட்டிலுள்ள சொத்துகளை முடக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் பயங்கரவாத செயல்பாடுகளில் சந்தேகிக்கப்படும் நபர்களின் பட்டியலில் மசூத் அசாரை இணைப்பதற்கு மற்ற ஐரோப்பிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று புல்வாமாவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பல உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இந்த சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
இந்நிலையில் பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுடன் எப்பொழுதும் பிரான்ஸ் துணை நின்றுள்ளது. இனியும் துணை நிற்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து ஐநா பாதுகாப்பு குழுவில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு பிரான்ஸ் முன்மொழிந்தது. இதற்கு ஐநா பாதுகாப்பு குழுவில் 13 நாடுகள் ஆதரவளித்தன. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நிரந்தர உறுப்பினர்களும், 10 நிரந்தரமில்லா உறுப்பினர்களும், உறுப்பினரல்லாத நாடுகளும் பிரான்ஸின் முன்மொழிதலுக்கு ஆதரவளித்துள்ளன.
எனினும், நிரந்தர உறுப்பினராக இருக்கும் சீனா இந்த முன்மொழிதலுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு இத்துடன் நான்காவது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. சீனாவின் செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. சீனாவின் போக்கு தொடர்ந்தால் வேறு நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.�,