இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், கடந்த மாதம் நியூசிலாந்தில் நடந்த மசூதி தாக்குதலுக்குப் பதிலடியாகவே நடத்தப்பட்டிருக்கிறது என்று இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததற்கு இலங்கை அரசு மன்னிப்பு கோரியிருக்கிறது.
கடந்த ஞாயிறு அன்று இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 321 பேர் பலியாகியுள்ளனர். பலர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யும் பணிகளும் இன்று தொடங்கியது. இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று (ஏப்ரல் 23) இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரவிருக்கிறது.
ஏற்கனவே 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்று மதியம் வெடிபொருள் நிரப்பிய ஒரு லாரியும், ஒரு வேனும் இலங்கை தலைநகர் கொழும்புவிற்குள் நுழைந்திருப்பதாகக் கூறப்படுகிறது, இதனால் அங்குத் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் கொழும்புக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பப்படுகிறது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை குண்டுவெடிப்புத் தொடர்பாக பல்வேறு கருத்துகளும் செய்திகளும் வெளியாகி வரும் நிலையில், இலங்கை பாதுகாப்புத் துணை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே, இந்த குண்டுவெடிப்புத் தாக்குதல், கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாகவே நடத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
தேசிய தவ்ஹீத் ஜமாத்தும், மற்றொரு சர்வதேச இஸ்லாமியவாதக் குழுவான ஜேஎம்சி என்ற அமைப்பும் இணைந்து இத்தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார் பாதுகாப்புத் துணை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே.
இதற்கிடையே மசூதி ஒன்றில், தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவன் பையில் வெடிகுண்டுகளுடன் செல்லும் [காட்சி](https://twitter.com/i/status/1120648357007876098) வெளியாகியுள்ளது.
இலங்கை தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஊடகமான அமாக் வெளியிட்டுள்ள செய்தியைக் குறிப்பிட்டு இச்செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. எனினும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தாக்குதலுக்கான ஆதாரத்தையும், காரணங்களையும் கூறவில்லை என்று கூறியுள்ளது.
**குண்டுவெடிப்புக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும் தொடர்பில்லை**
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும், தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும் தொடர்பு இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதற்கு மறுப்பும், கண்டனமும் தெரிவித்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச் செயலாளர் முகமது செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கை துயர சம்பவத்துக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின்னணியில், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தும், அதன் பின்னணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும் இருப்பதாகக் கூறுகிறார்கள். குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
ஆனால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்துக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. மக்கள் நலச் சேவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஈடுபட்டு வருகிறது. இலங்கையில் காயமடைந்தவர்களுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரத்த தானம் செய்துள்ளனர். தவ்ஹீத் ஜமாத் என்ற பெயர் இருப்பதால் இவ்வாறான குழப்பம் எழுந்துள்ளது” என்று விளக்கமளித்துள்ளார்.
இதற்கிடையே இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், இந்த சம்பவத்துக்கு வருந்துவதாகவும், உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கோருவதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
�,”