இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்த இந்தியா மற்றும் மங்கோலியா ஒப்பந்தம் செய்துள்ளன.
ஜூன் 21 முதல் 24 வரையில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அரசு முறைப் பயணமாக மங்கோலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பயணத்தில் இரு நாடுகளுடனான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் அந்நாட்டுத் தலைமையுடன் ராஜ்நாத் சிங் ஈடுபட்டதாகவும், பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் ஜூன் 25ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒப்பந்தம் குறித்து மங்கோலிய நாட்டின் அதிபர் பட்டுல்கா, பிரதமர் குரேல்சுக், துணை முதல்வர் என்க்டுவ்ஷின் மற்றும் பல அமைச்சர்களுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
விமானப் போக்குவரத்து, வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, ஆற்றல் பாதுகாப்பு, சுரங்கம், பாரம்பரிய மருத்துவம், கால்நடை வளர்ப்பு, திறன் மேம்பாடு, கல்வி, மக்கள் தொடர்புகள், ஊடக பரிமாற்றம் மற்றும் திரைப்படங்களில் ஒத்துழைப்பு போன்ற பிரிவுகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மங்கோலியாவில் புதிதாக (முதன்முதலாக) அமைக்கப்படும் பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு மையத்திற்கான தொடக்க விழாவிலும் தனது பயணத்தின்போது ராஜ்நாத் சிங் பங்கேற்றிருந்தார். இத்திட்டத்துக்கு இந்தியா தரப்பிலிருந்து 1 பில்லியன் டாலர் வரையிலான நிதியுதவி வழங்கப்படுகிறது.�,