தமிழகத்தில் உள்ள கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான மக்காச்சோளத்தை வெளிநாடுகளிலிருந்து ஜீரோ சதவிகித வரியுடன் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு மாதமாக நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் மத்திய அரசை வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் மக்காச்சோள இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது கோழி வளர்ப்பு. இந்தப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கோழிப் பண்ணைகள் மூலம் முட்டைகள், இறைச்சி ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனத்தில் மக்காச்சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது.அமெரிக்க படைப்புழு தாக்குதலால் இந்த ஆண்டு மக்காச்சோள உற்பத்தி கடும் சரிவைக் கண்டுள்ளது. இதனால் பண்ணைகளில் கோழிகளுக்குப் போடப்படும் தீவனங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் உதயசூரியன் சின்னத்தில் நின்ற, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ஏ.கே.பி.சின்ராஜ் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து இறக்குமதி செய்யப்படும் மக்காச்சோளங்களுக்கு வரியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து நேற்று முன்தினம் (ஜூலை 14) அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியாவில் நிகழாண்டில் 80 லட்சம் டன் அளவுக்கு மக்காச்சோளம் உற்பத்தி சரிந்ததால், கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோழிகளுக்கு வழங்கும் தீவனத்தில் மக்காச்சோளம் மட்டுமின்றி, மாற்றுத் தீவனங்களான கம்பு, நாட்டுச்சோளம், அரிசிக் குறுணை, கோதுமை உள்ளிட்டவை சேர்க்கப்படும். தற்போதைய சூழலில் மக்காச்சோளம் மட்டுமின்றி, இணைத் தீவனங்களும் தட்டுப்பாடாக உள்ளன. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய நிதி, வர்த்தக, கால்நடை, வேளாண் மற்றும் உணவுத் துறை அமைச்சர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். கடந்த வாரம் 4 லட்சம் டன் மக்காச் சோளத்தை, 15 சதவிகித வரியுடன் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மக்காச்சோளத்துக்கு 15 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. எனவே வரியை நீக்கி, ஜீரோ சதவிகித வரி என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் அலுவலகத்திலும் வலியுறுத்தினேன். இதைத்தொடர்ந்து மேற்குறிப்பிட்ட மூன்று துறை அமைச்சர்கள் இப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னிடம் பேசினர். அவர்கள் கோழிப்பண்ணைத் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கேட்டனர். அதன்பேரில் நாமக்கல்லில் முட்டைக்கோழி, கறிக்கோழி உற்பத்தியாளர்களுடன் கலந்து பேசி ஆவணங்களை வழங்குவதென ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்று தெரிவித்தார். தொடர்ந்து அந்த ஆவணங்களுடன் மத்திய அமைச்சர்களைச் சந்திக்க டெல்லி சென்றிருக்கிறார் ஏ.கே.பி.சின்ராஜ்.
இந்த விவரங்கள் நாமக்கல்லைச் சேர்ந்த அமைச்சர் தங்கமணி கவனத்துக்குத் தெரியவர, திமுக கூட்டணி எம்.பி. எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்துதான் நேற்று (ஜூலை 15) வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மக்காச்சோளத்துக்கு விதிக்கப்படும் வரியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கோழி உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. 2017-18 ஓராண்டில் மட்டும் 4 லட்சம் மெட்ரிக் டன் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2013-14 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் முட்டை உற்பத்தியில் 23.5 சதவிகிதம் மற்றும் கோழி இறைச்சியில் 30.53 சதவிகிதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,000 முதல் 1,300 அடுக்கு பண்ணைகள் உள்ளன. அந்த வகையில் பிராய்லர் கோழிகளை உற்பத்தி செய்வதில் இந்தியளவில் தமிழகம் நான்காவது இடத்திலும், முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனங்களில் 47 சதவிகிதம் மக்காச்சோளம்தான் உள்ளது. படைப்புழுவின் தாக்குதலால் அதன் விளைச்சல் குறைந்து, விலை அதிகரித்துள்ளது. இதனால் கோழிப் பண்ணையாளர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கோழிப் பண்ணையாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு மக்காச்சோளத்துக்கு விதிக்கப்படும் வரியை நீக்கி ஜீரோ சதவிகித வரியுடன் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
**விவசாயிகளுக்கு இழப்பீடு**
புழு தாக்கியதால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி சேலத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன்பு நேற்று (ஜூலை 15) விசாரணைக்கு வந்தது. அப்போது புழு தாக்கியதால் பாதிக்கப்பட்ட 17 மாவட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.186.25 கோடி இழப்பீட்டுத் தொகையை நான்கு வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**
�,”